தினமலர் 07.01.2010
ரோடுகளில் மாடு தொல்லையா செல்போனில் புகார் செய்யலாம்:தி.மலை சேர்மன் தகவல்
திருவண்ணாமலை:தி.மலை ரோடுகளில் இடையூறாக மாடுகள் உலா வந்தால் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று நகராட்சி சேர்மன் ஸ்ரீதரன் தெரிவித்தார். தி.மலை நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக ரோடுகளில் உலா வரும் மாடுகளை தொடர்ந்து பிடிக்கும் பணி தொடர்பாக நேற்று காலை நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, நகராட்சி சேர்மன் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். நகர நல அலுவலர் ராம்குமார், பிராணிகள் வதை தடுப்பு சங்க செயலாளர் நரசிம்மன், பொருளாளர் அரவிந்த்குமார், டிராபிக் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எக்ஸ்னோரா மாநில செயலாளர் இந்திரராஜன், பிராணிகள் வதை தடுப்பு சங்க நிர்வாகி ஆர்த்தீஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், வினோத்கண்ணா, கைலேஷ்குமார், அன்பழகன், நாகராஜன், விஜயகுமார், முன்னாள் கவுன்சிலர் சேட்டுமுருகேசன், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நகராட்சி சேர்மன் ஸ்ரீதரன் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மலை நகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றி திரியும் மாடுகளை தொடர்ந்து பிடிக்கவும், அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
முதல் முறையாக மாடுகள் பிடிபட்டால் 3 நாட்களுக்குள் அவைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராத தொகை செலுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த மாடுகள் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் மூலம் வேலூரில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.இனி தி.மலையில் உலா வரும் மாடுகளை நகராட்சி மற்றும் போலீஸ் ஒத்துழைப்புடன் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர் பிடிக்கவும் முடிவு செய்யப் பட்டது.
மேலும் தி.மலை நகரில் மாடுகள் பொதுமக்களுக்கு இடையூறாக திரிந்தால் உடனடியாக அது குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர்களை 93442 89438, 93442 89439, பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினரை 98401 22654 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக மாடுகள் பிடிக்கப்படும். எனவே பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றி திரியும் வகையில் மாடுகளை அதன் உரிமையாளர்கள் ரோடுகளில் விடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு சேர்மன் ஸ்ரீதரன் தெரிவித்தார்.