தினமலர் 01.03.2010
வந்தவாசி நகராட்சிக் கூட்டம்
வந்தவாசி:தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்று மனு கொடுத்தால் கண்டு கொள்வதில்லை. இந்த நிலை நீடித்தால் நகராட்சிக்கு வரி கட்ட வேண்டாம் என்று வீடுவீடாகச் சென்று மக்களிடம் நானே கூறுவேன்‘ என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஆவேசமாக பேசினார். வந்தவாசி நராட்சியில் நகராட்சி அவசர கூட்டம் சேர்மன் சீனுவாசன் தலைமையில் நடந்தது. கமிஷனர் சசிகலா,மேலாளர் புனிதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு;விஜயன்: கடந்த 3 ஆண்டுகளில் நடந்த பணிகள், அவை செய்து முடித்த தேதி, வரவு, செலவு அறிக்கைகளை கேட்டிருந்தேன். இதுவரை தரவில்லை.சேர்மன்: கணக்கு குறித்த அறிக்கை சில நாட்களில் கொடுக்கப்படும்.ரவிச்சந்திரன்: நகராட்சியில் எந்த மனு கொடுத்தாலும் பதில் தருவதில்லை. கேட்டால் கொடுத்த மனுக்கள் காணவில்லை என்ற பதில் வருகிறது. கவுன்சிலர்களுக்கே இப்படி என்றால் பொதுமக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் நகராட்சி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
சேர்மன்: இடைத்தேர்தல் வந்ததால் காலதாமதமாகிவிட்டது.மச்சேந்திரன்: நகராட்சி செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் திருப்தி இல்லாமல் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரி வசூல் செய்பவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்க வில்லை.வேலன்: 1, 2வது வார்டுகளில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதை புகாராக கூறி வருகிறேன். நடவடிக்கை இல்லை.
சேர்மன்: எப்போது சொன்னீர் கள்? அவை உடனே சரி செய்யச் சொல்கிறேன்.விஜயன்: கடந்த 2006ம் ஆண்டில் இருந்தே தெருவிளக்கு வேண்டும் என்று மனுக்களை கொடுத்து வருகிறேன். இது வரை அமைக்கவில்லை.மக்கள் கொடுக்கும் வரிப்பணம் அதிகாரிகளின் சம்பளத்திற்கு மட்டும்தானா? செய்யாத பணிகளுக்கும் பில் எடுக்கப்படுகிறது. எந்த கேள்வி கேட்டாலும் அதிகாரிகளும் பதில் சொல்வதில்லை. இதே நிலை நீடித்தால் என்னுடைய வார்டு மக்களிடம் வீடுவீடாகச்சென்று, யாரும் வரி கட்டாதீர்கள் என்று கூறிவிடுவேன்.சேர்மன்: அப்படி எல்லாம் செய்ய வேண்டாம். இனி வரும் காலங்களில் அனைத்தையும் சரிசெய்து விடலாம்.ரவிச்சந்திரன்: கட்டடம் கட்டுவதற்கான அனுமதி கேட்டு மனு கொடுத்தால் அதற்கு உடனே பதில் தருவதில்லை. நகராட்சிக்கு மக்கள் நடந்து நடந்து செருப்புதான் தேய்ந்துபோகிறது.
அன்பழகி: 1, 2, 24 ஆகிய வார்டுகளில் எரிமேடை கட்டுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை உடனே செய்துதர வேண்டும்.பாலு: வந்தவாசிக்கு வரும் குடிநீரை வழியோர கிராமத்தினர் குழாய்களை திருப்பி எடுத்துக்கொள்கின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேர்மன்: கோடை காலம் வருகிறது. அதற்குள் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.ஜலால்: தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். கட்டுப்படுத்த நகராட்சி முன்வரவில்லை.வேலன்: நாய்களை நாங்களே கொல்ல ஏற்பாடு செய்கிறோம். எங்கள் மீது எந்த பிரிவில் வேண்டுமானாலும் வழக்கு போட்டுக்கொள்ளுங்கள்.மச்சேந்திரன்: பஸ் நிலையத்தில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. பயணிகள் சிரமப்படுகின்றனர். ஏதாவது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.