தினமலர் 29.08.2012
வளர்ச்சி பணியில் கவனம் செலுத்துங்கள்:மாநகராட்சிக்கு எம்.எல்.ஏ., அறிவுரை
திருப்பூர்:””மாநகராட்சி பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஏராளமான மனுக்கள் வந்துள்ளன. நிர்வாகம், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,” என தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., தங்கவேலு தெரிவித்தார்.திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., தங்கவேலு, தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். இலவச பட்டா கேட்டு ஆயிரக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டன. அதுதவிர, எம்.எல்.ஏ., நிதி, மாநகராட்சி, மின் வாரியம், குடிமைப்பொருள் வழங்கல் துறை, போக்குவரத்து துறை, சுகாதார துறை, வீட்டு வசதி வாரியம், சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகள் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்தன. அதிகபட்சமாக, அடிப்படை வசதி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து பெற்ற 85 மனுக்கள் மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்பட்டன.தாழ்வாகச் செல்லும் மின் ஒயர்கள், கட்டடங்களின் மீது செல்லும் உயரழுத்த ஒயர்கள், மோசமான நிலையில் உள்ள மின்கம்பம், டிரான்ஸ்பார்மர் பழுது போன்ற புகார் மின்வாரிய அலுவலரிடம் அளிக்கப்பட்டது. மினி பஸ், ரேஷன் கடைபிரிப்பு, பொருட்கள் முறையாக வழங்காமை என ஏராளமான மனுக்கள், துறை வாரியாக எம்.எல்.ஏ., நேரடியாகச் சென்று உரிய அதிகாரிகளிடம் வழங்கினார். வருவாய்த்துறை குறித்த மனுக்கள், தாசில்தார் பாலனிடம் நேற்று அளிக்கப்பட்டன.
எம்.எல்.ஏ., தங்கவேலு கூறியதாவது:பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் முழுமையாக தொகுக்கப்பட்டு, வரிசை எண் அளித்து, துறை அலுவலர் மற்றும் துறை தலைவர் மற்றும் எனக்கு ஒரு பிரதி எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளும் பணிகள் தேர்வு செய்ய வழி கிடைத்தது.வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதியை பொறுத்தவரை மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சுகாதாரம் மற்றும் குடிநீர் சப்ளையில் இன்னும் ஏராளமான பணிகள் செய்ய வேண்டும். நிதியுதவி திட்டங்களில் வறுமைக்கோடு எண் வழங்க வேண்டும், என்றார்.