தினமலர் 22.11.2010
வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க அரசு செயலர் உத்தரவு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து அரசு முதன்மைச் செயலர் விஜயகுமார் ஆய்வு செய்தார். கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுகந்தி உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். “”வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசுத் துறைகளின் சார்பில் நடைபெற்றுவரும் அனைத்து திட்டப் பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முழுமையாக முடித்து அவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்,” என அரசுத்துறை அதிகாரிகளுக்கு அரசு செயலாளர் விஜயகுமார் உத்தரவிட்டார்.
ஆய்வு கூட்டத்தைத் தொடர்ந்து வேளாண்மைத் துறையின் சார்பில் விவசாயிகள் 50 பேருக்கு ரூ.5.38 லட்சம் மதிப்பிலான மார்க்கர் கருவி, களை எடுக்கும் கருவி, இடுபொருட்கள் போன்றவற்றை விஜயகுமார் வழங்கினார். மேலும் விவசாயிகள் 40 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. கறம்பக்குடி பஞ்சாயத்து யூனியனுகுட்பட்ட மழையூரில் இயங்கிவரும் அரசு மாணவர் விடுதியின் செயல்பாடு, தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் கரும்பு சாகுபடி ஆகியவற்றை அவர் நேரில் ஆய்வு செய்தார். வேளாண் இணை இயக்குனர் தங்கவேலு, மகளிர் திட்ட அலுவலர் திருவரங்கம் உட்பட அதிகாரிகள் பலர் உடன்சென்றனர்.