தினமலர் 26.04.2010
வாகன காப்பகங்களில் கூடுதல் கட்டணம் : நகராட்சி கவுன்சில் எச்சரிக்கை
சிவகாசி : சிவகாசியில் வாகன காப்பகங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அவற்றின் டெண்டர் ரத்து செய்யப்படும் என நகராட்சி கவுன்சில் எச்சரித்துள்ளது.சிவகாசி நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் ராதிகாதேவி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் அசோகன், பொறியாளர் முருகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
சிவானந்தம்: காமராஜர் பூங்கா திறந்தவெளி கழிப்பிடமாகி விட்டது.
தனலட்சுமி: சுப்பிரமணிய காலனியில் ஒன்றரை மாதமாக தண்ணீர் வரவில்லை. குழாயில் வரும் குடிநீர் நாற்றமடிக்கிறது. லாரி மூலம் குடிநீர் வழங்க வேண்டும்.
துணைத்தலைவர்: வெம்பக்கோட்டை அணையில் குடிநீர் ஒருமீட்டருக்கும் குறைவாக இருப்பதால் குடிநீர் ஒருவித வாசம் வீசுகிறது. மானூர் குடிநீர் அதிகளவில் வினியோகிக்கப்படுகிறது.
பாலகுரு: பஸ் ஸ்டாண்டில் தரைவாடகைக்கு விடப்பட்ட காலி இடத்தில் வாடகைக்கு எடுத்தவர்கள் கான்கீரிட் கட்டடம் கட்டுகின்றனர். இதற்கு அனுமதி உண்டா? ஏற்கனவே பஸ் ஸ்டாண்ட் இடநெருக்கடியாக உள்ளது. பஸ்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.
துணைத் தலைவர்: கான்கீரிட் கட்டடம் கட்ட கூடாது. இடத்தை பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலகுரு: பஸ் ஸ்டாண்ட் வாகன காப்பகத்தை குறைவான தொகைக்கு ஏலம் எடுத்து விட்டு வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
துணைத்தலைவர்: புகார் எழுதி கொடுங்கள். கூடுதல் கட்டணம் வசூலித் தால் டெண்டர் ரத்து செய்யப்படும். பின், 105 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.