தினமலர் 22.03.2013
வாடகை செலுத்தாத கடைகளுக்கு பூட்டு : ஓசூர் நகராட்சி அதிரடி நடவடிக்கை
ஓசூர்:
ஓசூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில், வாடகை
செலுத்தாமல் அடம் பிடித்த வியாபாரிகளின் கடைகளுக்கு, நகராட்சி அதிகாரிகள்
அதிரடியாக பூட்டு போட்டு, “சீல்’ வைத்தனர். இதனால், நேற்று ஒரே நாளில்,
ஐந்து லட்சம் ரூபாய் வாடகை வசூலானது.
ஓசூர் நகராட்சி புது பஸ்ஸ்டாண்ட்,
பழைய பெங்களூரு சாலை வணிக வளாகம், ராயக்கோட்டை சாலை எம்.ஜி.ஆர்.,
மார்க்கெட் மற்றும் காந்தி சிலை அருகே நகராட்சிக்கு நிரந்தர வருமானம்
கிடைக்கும் வகையில் கடைகள் கட்டி வியாபாரிகளுக்கு வாடகைக்கு
விடப்பட்டுள்ளன.
பஸ்ஸ்டாண்ட்டில், 55 கடைகள், இரு ஹோட்டல்கள், பழைய
பெங்களூரு சாலை வணிக வளாகத்தில், 46 கடைகள், எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில்,
15 கடைகள், ஒரு ஆடு அடிக்கும் தொட்டி ஆகியவை மூலம் மட்டும் நகராட்சிக்கு
ஆண்டுதோறும் நிரந்தரமாக ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
இதர
வருவாய் இனங்கள் உள்ளிட்ட வகையில் நகராட்சிக்கு ஆண்டுதோறும், 33 கோடியே, 45
லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக பஸ்ஸ்டாண்ட் கடைகள் மூலம்
மட்டும், 58 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
கடந்த ஓராண்டாக
பஸ்டாண்ட், பழைய பெங்களூரு சாலை வணிக வளாக கடைகளில் வியாபாரிகள் முறையாக
மாத வாடகையை செலுத்தாமல் இழுத்தடித்து வந்தனர். நகராட்சி கமிஷனர்
இளங்கோவன், பலமுறை எச்சரித்து நோட்டீஸ் வழங்கியும் வியாபாரிகள் தொடர்ந்து
வாடகையை செலுத்தாமல் ஏமாற்றி வந்தனர்.
இதையடுத்து, கமிஷனர் இளங்கோவன்
உத்தரவின்படி, நேற்று நகராட்சி மேலாளர் (பொ) திருமால்செல்வம், அலுவலர்
முரளிகிருஷ்ணன், உதவியாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் நாகரத்தினம், ரகுமான்
மற்றும் நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக பஸ்ஸ்டாண்ட், பழைய பெங்களூரு சாலை
வணிக வளாகங்களில் அதிரடி ஆய்வு நடத்தினர்.
அப்போது, வாடகை செலுத்தாத
கடைகளை பட்டியலிட்டு, அவற்றிற்கு நகராட்சி ஊழியர்கள் “சீல்’ வைத்து பூட்டு
போட்டனர். புது பஸ் ஸ்டாண்ட்டில், ஒரு உணவு விடுதி உள்ளிட்ட எட்டு
கடைகளுக்கும், பழைய பெங்களூரு சாலை வணிக வளாகத்தில் கடைகளும் பூட்டப்பட்டன.
பல
கடைகளுக்கு நகராட்சி ஊழியர்கள் பூட்டு போட்டதும், அதிர்ச்சியடைந்த
வியாபாரிகள், உடனடியாக நிலுவையில் இருந்த வாடகை பணத்தை நகராட்சி
அலுவலகத்தில் கட்டினர்.
வாடகை கட்டிய கடைகள் பூட்டை நகராட்சி அதிகாரிகள்
திறந்தனர். அதிகாரிகள் இந்த “பூட்டு’ நடவடிக்கையால், நேற்று ஒரே நாளில்,
பஸ் ஸ்டாண்ட் மற்றும் வணிக வாளகத்தில், ஐந்து லட்சம் ரூபாய் கடை வாடகை
வசூலானது. மதியம் முதல் எம்.ஜி.ஆர்., மார்க்கெட் உள்ளிட்ட மற்ற வருவாய் இன
கடைகளுக்கு சென்று நகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
நகராட்சி
அதிகாரிகள் கூறுகையில், “கடை வாடகை நிலுவையில் உள்ள வியாபாரிகளின் கடையை
பூட்டி கமிஷனர் வழங்கிய நோட்டீஸை வினியோகம் செய்து வருகிறோம். அதன்
பின்பும், வாடகை செலுத்தாத வியாபாரிகளிடம் நீதிமன்றம் மூலம் பணம்
வசூலிக்கவும், கடையை பறிமுதல் செய்து பிற்காலத்தில் கடை, டெண்டர்கள் எடுக்க
தடை விதிக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.