வாடகை பாக்கி நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கிய தனியார் ஓட்டல் பொருட்கள் ஜப்தி
தாராபுரம்,: தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான ஓட்டலில் உள்ள பொருட் களை வாடகை பாக்கிக்காக நகராட்சி நிர்வாகம் ஜப்தி செய்தது.
தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் நகராட்சிக்கு சொந்தமான உணவகம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் உணவகத்திற்கான ரூ.8 லட்சம் வாடகை பாக்கியை செலுத்த முடியாத அதன் உரிமையாளர் உணவகம் முன் பிளக்ஸ் போர்டு ஒன்றில் வாடகை செலுத்த முடியாததால், கடையை தொடர்ந்து நடத்த முடியவில்லை என விளம்பரப்படுத்தி விட்டு பாத்திரங்களுடன் ஓட்டம் பிடித்தார்.
அவரை தொடர்ந்து உள்ளூர் நபர்கள் ஓட்டலை எடுத்து நடத்த முன்வர வில்லை.
இதன் பின் வெளியூரை சேர்ந்த ஒருவர் கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அவராலும் கடை வாடகையை செலுத்த முடியவில்லை. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் கடைக்கு சீல் வைத்தது. இதற்கு கடை உரிமையாளர் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் நீதிமன்றம் வாடகை பாக்கியை உரிமையாளர் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து நகராட்சிக்கு நிலுவை வைத்திருந்த வாடகை பாக்கிக்காக நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த அண்டா,குண்டா உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் நகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் ஜப்தி செய்தனர்.
தாராபுரம் வழியாக தினமும் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரியில் இருந்து நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்லும் நிலையில் பஸ் ஸ்டேண்டில் உள்ள ஓட்டல்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டில் பயணிகளை உணவருந்த விடாமல் ஒட்டன்சத்திரத்தில் உள்ள மோட்டல்களுக்கு கொண்டு சென்று நிறுத்தப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்தி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பஸ் ஸ்டாண்டில் சாப்பிடும் வகையில் பஸ்கள் நிறுத்தப்பட வேண்டும். மேலும் மாநகராட்சிகளில் தற்போது மலிவு விலை டிபன் சென்டர் திறப்பது போல நகராட்சிகளிலும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது பஸ் ஸ்டாண்டிற்குள் அதனை திறந்தால் பயணிகள் மிகுந்த பயனடைவார்கள். நகராட்சி நிர்வாகத்திற்கும் உரிய வருமானம் கிடைக்கும் என்றனர்.