தினமலர் 28.07.2010
வார்டு அலுவலகங்களில் சொத்து வரி
சென்னை : வார்டு அலுவலகங்களில் சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் சொத்து வரி வசூலிப்பது. இந்த ஆண்டு 370 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலகங்களிலும், தலைமை அலுவலகம் ரிப்பன் கட்டத்திலும், சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. அதோடு, சொத்து வரி வசூலிப்பவர்கள் வீடு, வீடாக சென்று வரி வசூல் செய்கின்றனர்.
மேலும், சொத்து வரி வசூலிப்பை எளிமைப்படுத்த ஆன்–லைன் மூலமும், சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.இதற்கெல்லாம் மேலாக புதிதாக வார்டு அலுவலகங்களில் தனியாக ஊழியர்களை நியமித்து சொத்து வரி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மண்டல அலுவலகங்களுக்கும், தலைமை அலுவலகத்திற்கும் சென்று சொத்து வரி செலுத்த முடியாதவர்களின் வசதிக்காக வார்டு அலுவலகங்களில் சொத்து வரி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி கூறினார்.சொத்து வரி வசூலிக்க வார்டு அலுவலகங்களில் நியமிக்கப்படும் ஊழியர்கள், விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வார்டு அலுவலகத்தில் பணியிலிருந்து சொத்து வரி வசூலிப்பர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சொத்து வரி வசூலிக்கப்படும். வார்டு அலுவலகங்களில் பணிபுரியும் சொத்து வரி வசூலிப்பவர்கள் காசோலைகள் மட்டுமே பெற்றுக் கொள்வர்.விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பணிபுரிவதால் வார்டு அலுவலகங்களில் சொத்து வரி வசூலிப்பவர்களுக்கு திங்கள், செவ்வாய் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும். இதற்காக மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் 15 ஊழியர்களுக்கு சொத்து வரி வசூலிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கமிஷனர் கூறினார்.இந்த திட்டத்தை முதல் கட்டமாக கீழ்ப்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 64வது வார்டு முதல் 78வது வார்டு வரை 15 வார்டுகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் இதற்கான பலன் நன்றாக இருந்தால் இந்த திட்டத்தை படிப்படியாக மற்ற மண்டலங்களிலும் விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கமிஷனர் ராஜேஷ் லக்கானி கூறினார்.