தினமலர் 12.08.2012
வாலாஜாபாத் பேரூராட்சிக்கு பாதாள சாக்கடை :திட்ட மதிப்பீடு தயாரிப்பு
வாலாஜாபாத் : வாலாஜாபாத் பேரூராட்சியில், பாதாள சாக்கடை மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, 25 கோடி ரூபாய் மதிப்பிற்கு, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குடியிருப்புக்கள் அதிகரிப்பு
வாலாஜாபாத் பேரூராட்சி 1964ம் ஆண்டு, முதல் நிலை ஊராட்சியாக துவக்கப்பட்டது. பின் 1982ம் ஆண்டு தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
ஒரகடம் சிப்காட் உருவானதற்கு பின், பேரூராட்சியில் கட்டடங்களின் எண்ணிக்கை மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வாலாஜாபாத்தை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள்,, நிரந்தமாக பேரூராட்சியில் குடியேறி உள்ளனர்.மழை நீர் செல்வதற்காக, பேரூராட்சியில் 1990ம் ஆண்டு, மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அவை தற்போது கழிவு நீர் கால்வாயாக மாறி விட்டன. தெருக்களில் கழிவு நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
இவற்றை தடுக்கவும், சுகாதாரத்தை பாதுகாக்கவும், பேரூராட்சிப் பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என கோரிக்கை எழுந்தது.திட்ட மதிப்பீடு இதையடுத்து, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 25 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்துஉள்ளது.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி கூறும்போது, “”பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஆகியவற்றை செயல்படுத்த, பேரூராட்சி இயக்குனரகத்திற்கு, 25 கோடி ரூபாய் மதிப்பிற்கு மதிப்பீடு தயார் செய்து அனுப்பியுள்ளோம்.
நிதி கிடைத்ததும் பணிகள் துவக்கப்படும்,” என்றார்.