தினமணி 28.07.2010
விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு சீல்: சி.எம்.டி.ஏ. நடவடிக்கை
சென்னை, ஜூலை 27: சென்னை தேனாம்பேட்டையில் குடியிருப்பு வளாகம் கட்ட வாங்கிய அனுமதியை பயன்படுத்தி விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட அடுக்குமாடி வணிக வளாகத்தை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.
சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட, கட்டப்பட்டு வரும் பல்வேறு கட்டடங்களை பட்டியலிட்டு சீல் வைக்கும் நடவடிக்கைகளை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சில மாதங்களாக இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில், அண்ணா சாலை தேனாம்பேட்டை சர்வே எண்: 1433–3-ல் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தரை தளத்துடன் 2 தளங்கள் கொண்ட குடியிருப்பு வளாகம் கட்ட அந்த நிலத்தின் உரிமையாளர் சென்னை மாநகராட்சியில் 2007 நவம்பர் 22-ம் தேதி அனுமதி பெற்றார்.
ஆனால், இந்த அனுமதியைப் பயன்படுத்தி விதிகளுக்கு புறம்பாக தரைதளத்துடன் 4 மாடிகள் கொண்ட வணிக வளாகத்தை அவர் கட்டியுள்ளது சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த கட்டடத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு விதிமீறல்கள் குறித்து விளக்கம் கேட்டு சி.எம்.டி.ஏ. தரப்பில் இருந்து அந்த நிலத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
ஆனால், இந்த நோட்டீஸ்களுக்கு கட்டடத்தின் உரிமையாளர் உரிய விளக்கம் அளிக்காததால், அந்த வளாகத்தை சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட கட்டட வளாகத்திற்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலையில் சீல் வைத்தனர்.