தினமலர் 24.11.2010
விதிகளை மீறிய கட்டடங்களுக்கு அனுமதி
ஊட்டி: “கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறிய கட்டியுள்ள கட்டட உரிமையாளர்களிடம் கையூட்டு பெற்று கட்டட அனுமதி வழங்கியுள்ளார்,’ என நகராட்சி தலைவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடலூர் நகர மன்ற கவுன்சிலர்கள் சார்பில் தமிழ்செல்வன் மற்றும் செல்லதுரை ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: கூடலூர் நகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நகர மன்ற தலைவராக உள்ள அன்ன புவனேஸ்வரி மீதுள்ள குற்றச்சாட்டுகள்: நகராட்சி சார்பாக ஒதுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளை தனது சொந்தங்களுக்கு ஒதுக்கியது; அந்த பகுதிகளுக்கு நடைபாதை அமைத்து கொடுத்தது. மக்கள் நலத்திட்ட பணிகளை தனது பினாமியும், தனது சகோதரியின் கணவர் பெயரில் ஒப்பந்தம் எடுத்தது; தனது 8வது வார்டின் பணிகளை மேற்கொள்ளாமலேயே அகாரிகளை மிரட்டி, விதிமுறைகளை மீறி பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணித்தை கையாடல் செய்தது. தெருவிளக்குகளின் பராமரிப்புக்காக 4 மாதங்களுக்கு முன்பு தெருவிளக்கு உதிரி பாகங்கள் வாங்கியதில் ஊட்டியில் உள்ள தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து தரமற்ற பொருட்களை வாங்கி அதில் பெரும் தொகையை முறைகேடு செய்தார். அதற்கான பில் தொகையை கையொப்பமிட்டு ஒதுக்கீடு செய்து தருமாறு நகராட்சி பொறியாளரை வற்புறுத்தி வருகிறார்.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டியுள்ள கட்டட உரிமையாளர்களிடம் பல லட்சம் ரூபாய் கையூட்டு பெற்று கட்டட அனுமதியும் கதவு எண்ணும் வழங்கினார். நகராட்சி வாகனத்தை தனது சொந்த காரியங்களுக்கு பயன்படுத்துகிறார். நகர மன்றத்தில் உள்ள “மினிட்‘ புத்தகத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்து பல்வேறு ஊழல் முறைகேடுகளை செய்துள்ளார். டெண்டர் விடுவதில் விதிமுறையை கடைபிடிக்காமல் தமது விருப்பம் போல ஒப்பந்ததாரர்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதனால், நகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்காலிக பணியாளர்கள் நியமனத்தில் பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார். இனியும் இவர் நீடித்தால் நகராட்சியின் நிதியை பெருமளவில் மோசடி செய்வார். எனவே, இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. “இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,’ என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. “இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மாவட்ட நிர்வாக அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்,’ என கவுன்சிலர்கள் கூறி சென்றனர்.