தினத்தந்தி 25.11.2013
விதிமுறை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு “சீல்” உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

நெல்லை சந்திப்பு பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட வணிகவளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று “சீல்“ வைத்தனர்.
வணிக வளாகம்
பாளையங்கோட்டை ரகுமத் நகரைச் சேர்ந்த ஒருவர் நெல்லை சந்திப்பு சாலை
குமாரசாமி கோவில் எதிரே வணிகவளாகம் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பித்தார்.
தரை தளம், வாகனம் நிறுத்தும் இடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் வாகனம் நிறுத்தும் இடம் அமைக்காமல், மாடி அமைத்து கட்டிடம்
கட்டப்பட்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்
வந்தது. அதிகாரிகள் அந்த வணிக வளாகத்தை ஆய்வு செய்தனர்.
விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டது தெரியவந்தது. இது குறித்து
விளக்கம் கேட்டு கடந்த செப்டம்பர் மாதம் 19–ந் தேதி சம்பந்தப்பட்டருக்கு
நோட்டீசு அனுப்பப்பட்டது. அந்த கடிதத்துக்கு எந்த பதிலும் வரவில்லை.
கடைகளுக்கு “சீல்“
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையாள் மோகன் உத்தரவின் படி,
செயற்பொறியாளர் சவுந்திரராஜன் ஆலோசனைப்படி, தச்சநல்லூர் உதவி ஆணையாளர்
(பொறுப்பு) சாமுவேல் செல்வராஜ் முன்னிலையில் அந்த கட்டிடத்துக்கு “சீல்“
வைக்கப்பட்டது.
தரை தளத்தில் உள்ள 6 கடைகளுக்கும், மேல் தளத்தில் உள்ள ஒரு கடைக்கும் சீல் வைக்கப்பட்டன.
அப்போது இளநிலை பொறியாளர்கள் கருப்பசாமி, பைஜூ, கிராம நிர்வாக அலுவலர் அரிகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.
ரூ.18 கோடி பாக்கி
இது குறித்து உதவி ஆணையாளர் சாமுவேல் செல்வராஜ் கூறும் போது,
“தச்சநல்லூர் மண்டலத்தில் ரூ.18 கோடி சொத்து வரியும், ரூ.2 கோடி
குடிதண்ணீர் கட்டணமும் நிலுவையில் உள்ளது. இதற்கான பட்டியல் தயார்
செய்யப்பட்டு, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளன. வரி கட்டாதவர்களின்
குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும்“ என்றார்.