விளம்பர பலகைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்ற அதிகாரிகள் தயக்கம்
தாம்பரம்: கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து, முக்கிய சாலைகளில் உள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணியில்,பேரூராட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டு உள்ளன. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தாம்பரம் – வேளச்சேரி சாலை, ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட, முக்கிய சாலைகளின் பராமரிப்பு குறித்த கூட்டம், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சித்ரசேனன் தலைமையில் நடந்தது.
இதில், சிட்லபாக்கம், பீர்க்கண்காரணை, பெருங்களத்தூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், முக்கிய சாலைகளின் இருபுறத்திலும் குப்பை, பிளாஸ்டிக் கொட்டுவதை தடுக்க வேண்டும். மாடு, நாய்கள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த வேண்டும்.
இருபுறத்திலும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என,உத்தரவிடப்பட்டது. கலெக்டரின் இந்த உத்தரவை தொடர்ந்து, முக்கிய சாலைகளில், அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ள, விளம்பர பலகைகளை அகற்றும் பணியில், பேரூராட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டு உள்ளன. செம்பாக்கம் பேரூராட்சியில், அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகளை, பேரூராட்சி அதிகாரிகள் அகற்றினர். சில பலகைகளுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற, அதிகாரிகள் தயக்கம் காட்டிவருகின்றனர்.