தினகரன் 11.08.2010
விழுப்புரத்தில் நகரஊரமைப்புஅலுவலகம் அமைச்சர்திறந்துவைத்தார்
விழுப்புரம், ஆக. 11: விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய நகர ஊரமைப்பு மண்டல அலுவலகம் செங்கல்பட்டில் இயங்கி வந்தது. விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு இவ்விரு மாவட்டங்களை உள்ளடக்கி 12வது மண்டல அலுவலகம் விழுப்புரம் தாட்கோ வளாகத்தில் (பழைய ஆட்சியர் அலுவலகம்) உதயமானது. 4000 & 15000 சதுரடியில் வீடு கட்டவும், அதிகபட்சம் 5 ஏக்கரில் புதிய மனைப்பிரிவு, திருமண மண்டபம், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
ஆட்சியர் பழனிசாமி தலைமை தாங்கினார். நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் மணி வரவேற்றார். அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், செங்கல்பட்டில் இயங்கி வந்த நகர ஊரமைப்பு மண்டல இயக்குனர் அலுவலகம் இரண்டாக பிரிக்கப்பட்டு விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கி மண்டல அலுவலகம் விழுப்புரத்தில் இன்று (நேற்று) திறந்து வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் உள்ளூர் திட்ட குழுமம், திண்டிவனம் தனித்த உள்ளூர் திட்டக் குழுமம், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெல்லிக்குப்பம் தனித்த உள்ளூர் திட்ட குழுமங்கள் செயல்படும். மக்களின் வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் புஷ்பராஜ் எம்எல்ஏ, நகர்மன்ற தலைவர் ஜனகராஜ், நகராட்சி ஆணையர் சிவக்குமார், மாவட்ட திமுக பொருளாளர் புகழேந்தி, வேளாண் விற்பனை குழுத் தலைவர் ராதாமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பழனிசாமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஏகாம்பரம், மாரியப்பன், நகர ஊரமைப்பு அலுவலக மேற்பார்வையாளர்கள் சுந்தர், கோவிந்தன், நகர அமைப்பு அலுவலர் கோகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.