தினமணி 16.09.2010
விழுப்புரம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
விழுப்புரம், செப்.15: விழுப்புரம் அருகே உள்ள விராட்டிக்குப்பம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக சிறப்பு கிராமசபா கூட்டத்தைக் கூட்டி தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.
ஊராட்சிமன்றத் தலைவர் க. ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
விராட்டிக்குப்பம் ஊராட்சியில் உள்ளவர்கள் அனைவரும் விவசாயக் கூலிகள்.
அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார்கள். இதனால் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய ஊரக வேலை உறுத்தித் திட்டம் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வருகிறார்கள்.
இப்பகுதியை நகராட்சியுடன் இணைத்தால் இத்திட்டம் செயல்படுத்த இயலாது. எனவே வேலைவாய்ப்பின்றியும், வருமானமின்றியும் மக்கள் அவதியுறும் நிலை ஏற்படும்.
நகராட்சியுடன் இணைத்தால் போதிய வளர்ச்சிப்பணிகள் இப்பகுதிக்கு கிடைக்காது எனவே இணைப்பு திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சசிகலா புண்ணியகொடி, ஒன்றியக்குழு உறுப்பினர் இரா.ச. ரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.