தினகரன் 19.08.2010
விழுப்புரம் நகரில் சாலை பணிகள் டிசம்பருக்குள் முடிவடையும் நகர்மன்ற தலைவர் தகவல்
விழுப்புரம், ஆக. 19: விழுப்புரம் நகரத்தில் 40கி.மீ தூரத்திற்கு சிமெண்ட் சாலை பணிகள் வருகிற டிசம்பருக்குள் முடிக்கப்படும் என்று நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட பகுதியில் செயல்படுத்தப்படும் நிதித்திட்டத்தை மத்திய அரசு எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து 4 நாட்கள் பயிற்சி விழுப்புரம் நகராட்சி பயணிகள் விடுதியில் நேற்று தொடங்கியது. இதில் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமை கோவை தமிழ்நாடு நகரியல் பயிற்சி மையம் நடத்தியது.
முகாமை துவக்கி வைத்து நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் பேசியதாவது:
தமிழகத்திலேயே வரி உயர்வு இல்லாத நகராட்சி விழுப்புரம் நகராட்சி தான். தினசரி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் நகரில் 90 சதவீதம் தெருவிளக்குகள் எரிகின்றன. நகரின் முக்கிய பிரச்சனை சாலைகள் சேதமடைந்துள்ளது தான். பாதாள சாக்கடை திட்டங்கள் சரிசெய்யப்பட்டு 40கி.மீ தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்படும். அதற்காக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி முயற்சியின் பேரில் ரூ.6 கோடி பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கவுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் நகராட்சி ஆணையர் சிவக்குமார், பொறியாளர் பாரத்திபன், ஓவர்சீஸ் ஜெயபிரகாஷ்நாராயணன், நகர மன்ற உறுப்பினர்கள் சுரேஷ்பாபு, கம்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.