தினமணி 5.11.2009
வீடுகள்தோறும் தனிநபர் கழிப்பறை – ஆட்சியர்
நாமக்கல், நவ. 4: கிராமப்புற வீடுகள் தோறும் தனிநபர் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளை ஆட்சியர் சகாயம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் கூறியது: திறந்த வெளியில் மலம் கழிப்பதாலேயே பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன.
குறிப்பாக கொசு உற்பத்தியை அதிகமாகி காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டிய நிலையுள்ளது. தொற்று நோய்களில் 30 முதல் 40 சதம் திறந்த வெளியில் மலம் கழிப்பதாலேயே பரவுகிறது.
இதனைத் தவிர்க்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். தனிநபர் கழிப்பறை அவசியத்தை உணர்ந்து அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும்.
இதற்காக அரசு மானியம் வழங்குகிறது. இதனை பயன்படுத்தி குக்கிராமங்களிலும் வீடுகள் தோறும் கழிப்பறை அமைக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகள், 15 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடை செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர்.