தினமலர் 03.08.2010
வீட்டு குடிநீர் இணைப்புக்கு அதிக டெபாசிட்
திருநெல்வேலி:நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ஆலங்குளம் டவுன் பஞ்., திமுக, காங்., கூட்டணி கவுன்சிலர்கள் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:நெல்லை மாவட்டத்தில் உள்ள 36 டவுன் பஞ்.,களில் கீழப்பாவூர் டவுன் பஞ்.,ல் வீட்டு இணைப்புக்கு 4,110 ரூபாய், சுரண்டை டவுன் பஞ்.,ல் 4,500 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.ஆனால் ஆலங்குளம் டவுன் பஞ்., பகுதியில் ஏழை மக்களை வாட்டி வதைக்கும் வகையில் மக்கள் விரோத போக்குடன் 8,100 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இக்கட்டணத்தை குறைக்க கோரி பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, ஆலங்குளம் டவுன் பஞ்., பகுதியில் குடிநீர் இணைப்பு பெற 4,110 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று (3ம் தேதி) முதல் டவுன் பஞ்., அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் கவுன்சிலர்கள் ராஜதுரை, தங்கசெல்வம், ராமரத்தினம், மோகன்ராஜ், ஜெயந்தி சின்னதம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.