தினமணி 14.06.2010
வீட்டுக் குடிநீர் இணைப்பில் மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
களக்காடு, ஜூன் 13: களக்காடு பேரூராட்சிப் பகுதியில் வீட்டுக் குடிநீர் இணைப்பில் மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு நடைபெறுவதாகவும், இதனால் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
களக்காடு பேரூராட்சிக்கு உள்பட்ட 21 வார்டுகளிலும் 1,000 வீட்டுக் குடிநீர் இணைப்புகளும், நூற்றுக்கணக்கான பொது நல்லிகளும் உள்ளன. இவை மூலம் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சுமார் 1 மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
குடிநீர்க் குழாய்களில் மிகவும் குறைவான அளவில் சுமார் 10 குடங்கள் மட்டுமே தண்ணீர் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலான வீடுகளில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை ஏதுமில்லை.
கோயில்பத்து பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு நடைபெறுவதாகவும், இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம் வீட்டுக் குடிநீர் இணைப்பில் முறைகேடாக மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவோரைக் கண்டறிந்து மோட்டாரை பறிமுதல் செய்வதுன் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.