தினமணி 02.07.2013
மதுரை மாநகராட்சி மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள
வெறிநாய்களை ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு சென்னை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
வழக்குரைஞர் சி.எழிலரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள்
எஸ். ராஜேஸ்வரன், டி. மதிவாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு
உத்தரவிட்டது.
மனு விவரம்: மதுரை நகர் பகுதிகளில் 18,500 தெருநாய்கள்
சுற்றித்திரிகின்றன. அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த
மாநகராட்சியில் ஓரே ஒரு மையம் மட்டுமே உள்ளது. இதன் மூலம் 2 மாதங்களில் 692
நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் நாய்களைப்
பிடிக்கும் ஊழியர்களும் போதிய அளவில் இல்லை.
இதனால் ரேபிஸ் பாதித்த நாய்களை, பொதுமக்களே விஷம் வைத்து கொன்று
விடுகின்றனர். இப்படி கொல்லப்படும் நாய்களால் சுகாதார பாதிப்பு
ஏற்படுகிறது. எனவே. ரேபிஸ் நோய் பாதித்த நாய்களை விஷ ஊசி போட்டுக் கொல்ல
ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில்
குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனுவுக்கு, மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்
மனுவில், பிராணிகள் நலவாரிய விதிகள் காரணமாக, நாய்களைக் கட்டுப்படுத்த
முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பிராணிகள் நலவாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில்,
ரேபிஸ் பாதித்த நாய்களை கொல்வது தொடர்பாக நாங்கள் எந்த வழிகாட்டுதலையும்
தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள் திங்கள்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
மதுரை மாநகராட்சி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ரேபிஸ் பாதித்த நாய்களை
ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய
வேண்டும். மதுரை அரசு மருத்துவமனையில் வெறிநாய்க் கடிக்கான மருந்து
கையிருப்பு மற்றும் அவசர சிகிச்சை வசதி எந்த அளவில் உள்ளன என்பது
குறித்து ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வழக்கில் பிராணிகள் நலவாரியத்தையும் எதிர் மனுதாரராகச் சேர்க்க
வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.