தினமணி 10.07.2013
தினமணி 10.07.2013
வெறிநாய்க்கடி சம்பவங்கள் குறைவு
மதுரை மாநகராட்சியில் வெறி நாய்க்கடி சம்பவங்கள்
குறைந்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாநகராட்சி
ஆணையர் ஆர்.நந்தகோபால் தகவல் தெரிவித்துள்ளார்.
வழக்குரைஞர் சி.எழிலரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள்
எஸ்.ராஜேஸ்வரன், டி.மதிவாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து
வெறிநாய்களை ஒழிக்க ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தது. மேலும் மாநகராட்சி
ஆணையர் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இதன்படி ஆணையர் ஆர்.நந்தகோபால் தாக்கல் செய்துள்ள பதில் மனு:
நாய்களை பிடிப்பது, கருத்தடை செய்வது, ரேபிஸ் தாக்காமல் தடுக்க
தடுப்பூசி போடுவது போன்றவற்றை, மாநகராட்சி நிர்வாகம் முறையாகச்
செயல்படுத்தி வருகிறது. இதற்கென பயிற்சி பெற்ற ஊழியர்கள், மருத்துவர்கள்
பணியாற்றுகின்றனர். நாய்களை வலை போட்டு பிடிக்கிறோம்.
அவற்றை பன்முக சிகிச்சை மையங்களுக்குக் கொண்டு சென்று கருத்தடை செய்து
விடுகிறோம். இதற்காக பிரத்யேக அறுவைச் சிகிச்சைக் கூட வசதியும் உள்ளது.
மேலும் நாய்களை அடைத்து வைத்திருக்க தனித் தனி கூண்டுகளும் உள்ளன.
கருத்தடை செய்தபிறகு, ஆண் நாய்களை 3 நாள்களும், பெண் நாய்களை 7 நாள்கள் வரையிலும் அடைத்து வைத்து பராமரிக்கிறோம்.
இந்தக் காலத்தில் அவற்றுக்கு போதிய உணவளிக்கும் பணியில் சுயஉதவிக் குழுவினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பிறகு அவற்றை பிடித்த இடத்துக்கு கொண்டு சென்று விட்டு விடுகிறோம்.
மக்கள் அச்சத்தை போக்கவே, இந்த திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி
வருகிறது.
இதன் காரணமாக, மதுரை மாநகராட்சி பகுதிகளில் வெறிநாய்க்கடி சம்பவங்கள்
குறைந்து விட்டன. 2007, 2008, 2009 ஆகிய 3 ஆண்டுகளில் வெறிநாய்க் கடியால்
உயிரிழப்பு ஏற்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை வருகி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.