தினமலர் 05.03.2010
ஸ்காட் ரோடு வாகன நிறுத்துமிடம் ஏலம் மாநகராட்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை:”மதுரை ஸ்காட் ரோட்டில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிப்பதற்காக, மாநகராட்சி ஏலம் நடத்தலாம். ஆனால் அதை உறுதி செய்ய கூடாது‘ என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.ஸ்காட்ரோடு மீனாட்சி பஜார் சிறுதொழில், வியாபாரிகள் சங்க தலைவர் ராமையா தாக்கல் செய்த ரிட் மனு:
மதுரையில் ஸ்காட் ரோடு உட்பட பல இடங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கும் உரிமையை ஏலம் விட, மாநகராட்சி முடிவு செய்து, பிப்ரவரி 17ம் தேதி ஏல அறிவிப்பு வெளியிட்டது. ஸ்காட் ரோடு ஏற்கனவே குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. சிறிய கடைகள் மட்டுமே இயங்குகின்றன. ஐந்து ரூபாய் முதல் நடுத்தர மக்களுக்காக குறைந்த விலையில் வியாபாரம் செய்கிறோம். அந்த ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தால் வியாபாரம் பாதிக்கப்படும்.
பெரியளவில் வியாபாரம் நடக்கும் பாண்டிபஜார், வடக்கு வெளி வீதி, வக்கீல் புது தெரு, வெங்கல கடைதெரு போன்றவற்றில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க ஏலம் விடப்படவில்லை. மாநகராட்சியின் ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் நடராஜன், முருகன் ஆஜராயினர்.நீதிபதி கே.வெங்கட்ராமன், மாநகராட்சி ஏலம் நடத்தலாம். ஆனால் அதை உறுதி செய்ய கூடாது,” என்றார்.