ஸ்ரீ விலி.யில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
ஸ்ரீவில்லிபுத்தூர், ரெங்கநாதபுரம் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முருகன், நகர் அ.தி.மு.க. செயலாளர் வி.டி.முத்துராஜ், நகர்மன்ற உறுப்பினர் நடராஜன், நகர்நல அலுவலர் ஐயப்பன் உள்ளிட்டோருடன் செவ்வாய்க்கிழமை நகரில் நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
ரெங்கநாதபுரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்ட அவர், அங்கிருந்த பொதுமக்களிடம் பேசுகையில் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அனைத்து தரப்பு மக்களும் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி உழைத்து வருகிறார். கிராம மக்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தை தந்து வெண்மை புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அரசின் நிதியில் 4-ல் ஒரு பங்கு கல்வித்துறைக்கு வழங்கி மாணவர்கள் தரமான உயர் கல்வி பெற திட்டங்களை தந்துள்ளார். உலகளாவிய அறிவை பெற மாணவர்களுக்கு மடிக்கணினி.
குடும்ப பெண்களின் சுமையை குறைக்க மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படுகிறது. தமிழக அரசின் திட்டங்கள் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது.
காவிரி பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் இடம் பெறச் செய்தவர் ஜெயலலிதா. மின்சாரம் பற்றாக்குறை, முல்லைபெரியாறு அணை பிரச்னை என தமிழக பிரச்னைகளில் மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது. இவற்றிலும் தமிழக முதல்வர் தமிழகத்தின் நலன் காக்கப்படும் வகையில் போராடி வெற்றி பெறுவார் என்றார் அவர்.