தினமலர் 19.11.2010
ஸ்ரீரங்கத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கி நடந்து வருகிறது. பூலோக வைகுண்டம் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 6ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா டிசம்பர் 17ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆக்ரமிப்புகள் அகற்றப்படுவது வழக்கம். இந்தாண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். ஸ்ரீரங்கம், காந்திசாலை, தெற்குவாசல், சித்திரை வீதிகள் பகுதியில் 150க்கும் மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. தெற்குவாசலில் கடைகள் வைத்திருப்போர் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். சாத்தார வீதி, உத்திரவீதி பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.