தினமணி 15.09.2009
அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம்
கோவை, செப்.14: கோவை மாநகரப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார். அதையடுத்து நகரமைப்பு அலுவலர் செüந்தரராஜன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு இடங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பலகைகளை அகற்றினர். ஆர்.எஸ்.புரம் பொன்னுரங்கம் சாலை, டி.வி.சாமி சாலை, வைத்திலிங்கம் வீதி, பூமார்க்கெட் சாலை, சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர். சாலை மற்றும் குறுக்கு வீதிகளில் இருந்த பலகைகள் அகற்றப்பட்டன.
அதேபோல மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவுகளில் அனுமதியின்றி மாட்டப்பட்டிருந்த வர்த்தக நிறுவனங்களின் விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன. இதேபோல பல்வேறு இடங்களிலும் கழிவுநீர்க் கால்வாய்களின் சிலாப்களில் சிறிய பெட்டிக் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். தவறும்பட்சத்தில் அத்தகைய கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றப்படும் என நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.