மாநகராட்சிக்கு வரி செலுத்துவோர் கவனத்துக்கு…
திருநெல்வேலி மண்டலப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மாநாகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாநகராட்சியின் மண்டல உதவி ஆணையர் து. கருப்பசாமி கூறியது: திருநெல்வேலி மாநகராட்சி, திருநெல்வேலி மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துக்களின் வரிவிதிப்பாளர்கள் சட்ட விதிகளின்படி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2014-15ஆம் ஆண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, புதை சாக்கடை சேவை கட்டணம், கடை வாடகை ஆகிய வரியினங்களை 15.10.2014ஆம் தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். இந்த காலத்தில் வரி செலுத்தாதவர்கள் தங்களது வரி இனங்களை மாநகராட்சியின் கணினி சேவை மையம் அல்லது மண்டல அலுவலகங்களில் உள்ள கணினி வரி வசூல் மையங்களில் உடனடியாக செலுத்த வேண்டும். நிலுவையை செலுத்த தவறினால் ஜப்தி, சீல் வைத்தல், குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உதவி ஆணையர் எச்சரித்துள்ளார்.