மாலை மலர் 29.10.2010
வில்லிவாக்கம் ரெயில்வே சுரங்கபாதை டிசம்பர் மாதம் திறப்பு: மண்டல குழு தலைவர் தகவல்
சென்னை அக். 29- சென்னை மாநகராட்சி 4-வது மண்டல குழு கூட்டம் அயனாவரத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. மண்டல தலைவர் வி.எஸ்.ஜெ. சீனிவாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மண்டல அதிகாரி பூமிநாதன், கவுன் சிலர்கள் சாமிக்கண்ணு, நாகராஜன், காஞ்சிதுரை, மாலினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
பின்னர் மண்டல தலைவர் வி.எஸ்.ஜெ. சீனிவாசன் கூறியதாவது:-
முதல்–அமைச்சரின் வழிகாட்டுதலின்படி துணை முதல்–அமைச்சர்கள் ஆலோசனையின் கீழ் சென்னை மாநகராட்சி 4 ஆண்டுகளை கடந்து 5-வது ஆண்டு மக்கள் பணியை தொடங்குகிறது. கடந்த 4 வருடத்தில் பல்வேறு நலத்திட்டப்பணிகள் இப்பகுதி, மக்களுக்கு நிறை வேற்றி கொடுக்கப்பட்டுள்ளன.
மிகப்பெரிய சாதனை திட்டங்களாக பெரம்பூர் ரெயில்வே மேம்பாலம் திகழ்கிறது. இதையடுத்து ரூ.10 கோடியில் பெரம்பூரில் லோகோ பாலம் கட்டும் பணி நிறைவடைகிறது. வில்லிவாக்கத்தில் ரெயில்வே சுரங்கபாதை கட்டப்படுகிறது. அந்த பணியும் நிறை வடைந்து இரண்டு பாலங்களும் டிசம்பர் மாதத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.
மழை நீர் வடிகால், பூங்காக்கள் ஏராளம் அமைக்கப்பட்டுள்ளன. 60-வது வட்டத்தில் பசுமை மாறா உலர் வெப்பகாடு ஒரு கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 51-வது வட்டத்தில் ரூ.1.20 கோடி செலவில் சத்துணவு கூடம் எம்.எல்.ஏ. நிதியில் கட்டப்பட்டுள்ளது.
54-வது வட்டத்தில் 22 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பாலவாயல் நடைபாதை வியாபாரிகளுக்கு மார்க்கெட் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.ரூ.3? கோடி செலவில் தார் சாலை போடப்பட்டுள்ளது. ரூ.52 கோடி செலவில் மழை நீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. அயனாவரம் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் செலவில் கூடு தல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
51-வது வட்டத்தில் தீட்டி தோட்டத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்துள்ளன. இதுதவிர உடற்பயிற்சி கூடம், சிமெண்ட் சாலை, என பல்வேறு மக்கள் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
5-வது ஆண்டிலும் மேலும் பல திட்டங்கள் இப்பகுதி மக்களுக்கு செய்து கொடுக்க சென்னை மேயர் தயாராக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.