தினமணி 20.08.2013
தினமணி 20.08.2013
இடிபாடு குப்பைகளை கொட்ட அனைத்து மண்டலங்களிலும் தனியிடம்
சென்னையில் சேரும் கட்டுமான இடிபாடு குப்பைகளை
கொட்டுவதற்கு என்று தனியாக ஒவ்வொரு மண்டலத்திலும் வளாகம் அமைக்கப்படும்
என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் சேரும் குப்பைகள் அனைத்தும் பெருங்குடி, பள்ளிக்கரணை,
கொடுங்கையூர் உள்ளிட்ட குப்பைக் கொட்டும் வளாகங்களில் கொட்டப்படுகின்றன.
இந்த குப்பைகளுடன் கட்டட இடிபாடு குப்பைகளும் இந்த வளாகங்களில்
கொட்டப்படுகின்றன. மேலும் சென்னையில் உள்ள நீர்வழிப் பாதைகளின் கரைகளிலும்
கட்டடக் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில்,
அனைத்து மண்டலங்களிலும் இடிபாடு குப்பைகளைக் கொட்ட தனி வளாகங்கள்
கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னையில் இடிபாடு
குப்பைகள் மற்ற குப்பைகளுடன் சேர்த்து குப்பை கொட்டும் வளாகங்களில்
கொட்டப்படுகின்றன. மேலும் சாலையோரங்களிலும் இடிபாடுகள் கொட்டப்படுகின்றன.
இதனைத் தடுக்க மாநகராட்சி முயற்சித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு இடம் தேர்வு செய்து
இடிபாடு குப்பைகள் கொட்ட வளாகம் அமைக்கப்படும். இடிபாடு குப்பைகளை இந்த
வளாகங்களில் மட்டுமே கொட்டவேண்டும். மேலும் இதற்கு கட்டணம் வசூலிக்கவும்
உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் கூடிய விரைவில் செயல் வடிவம் பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.