தினமணி 01.06.2010
குப்பைகளை அகற்ற புதிய ஒப்பந்தப்புள்ளி: நாகர்கோவில் நகர்மன்ற கூட்டத்தில் தகவல்
நாகர்கோவில், மே 31: நாகர்கோவிலில் குப்பைகளைச் சேகரித்து அகற்றும் பணிக்கு புதிய ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளதாக நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் அசோகன் சாலமன் தெரிவித்தார்.
நாகர்கோவில் நகர்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அசோகன்சாலமன் தலைமை வகித்தார். ஆணையர் ஜானகி, துணை தலைவர் சைமன்ராஜ் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை தலைவர் வாசிக்கத் தொடங்கினார். அவரை பாஜக உறுப்பினர் ஆர்.எம். முருகன் இடைமறித்து நகராட்சிப் பூங்காவையொட்டி மின்மாற்றி அமைக்க இடம் ஒதுக்கிய பிரச்னையைக் கிளப்பினார். ஆனால் அதைப் பொருள்படுத்தாமல் உறுதிமொழியை தலைவர் வாசிக்க, உறுப்பினர்கள் அதை வழிமொழிந்தனர்.
இதையடுத்து, மின்மாற்றி அமைக்க இடம் அளித்த விவகாரத்தை பாஜக உறுப்பினர்கள் முருகன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் கிளப்பினர். நகர்மன்றக் கூட்டத் தீர்மானம் இல்லாமல் அந்த இடத்தை எப்படிக் கொடுக்கலாம் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்து தலைவர் கூறியதாவது:
நகராட்சிப் பூங்காவையொட்டி சாலையில் மின்மாற்றி அமைத்தால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடத்தை அளித்தோம். இதில் எவ்விதத் தவறும் இல்லை. தேர்தல் நோக்கத்துக்காக பாஜகவினர் இவ் விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது.
நகராட்சியின் சொத்து இம்மியளவுக்குக்கூட விட்டுக்கொடுக்கப்பட மாட்டாது. மக்கள் நலனுக்காக மின்மாற்றி அமைக்க இடம் அளிக்கப்பட்டதே தவிர, ஒரு சாராருக்கு ஆதரவாக இதைச் செய்யவில்லை.
இதேபோல, பெருமாள்குளம் நிலப் பிரச்னையையும் பாஜக திசை திருப்பியுள்ளது. இது சிஎஸ்ஐ டயோசீசனுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் உள்ள பிரச்னை. இதில் 3-வது நபர் தேவையில்லை.
பெருமாள்குளம் நிலம் சிஎஸ்ஐ டயோசீசனுக்கு சொந்தமானது என்றும், அதிலிருந்து ஒரு சிறு இடத்தில் சாலை அமைக்க நகராட்சிக்கு இடம் ஒதுக்கித்தருவது தொடர்பாக 19.6.06-ல் நகர்மன்றக் கூட்டத் தீர்மானம் (எண் 506) நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்போது பாஜகவைச் சேர்ந்தவர்தான் நகர்மன்றத் தலைவராக இருந்துள்ளார். எனவே, இப் பிரச்னைக்கு இந்தளவில் முற்றுப்புள்ளி வைப்போம் எனக் கூறிவிட்டு, அத் தீர்மானத்தை மன்றத்தில் தலைவர் வாசித்து காட்டினார்.
நகரில் குப்பைகள் அதிகளவில் தேங்குவது குறித்தும், குப்பை நகரமாக நாகர்கோவில் மாறி வருவதையும் ராம்மோகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிப் பேசினர்.
மூன்றரை ஆண்டுகளாக குப்பைகளை அகற்றாமல் மோசமான நிர்வாகம் நடைபெற்று வருகிறது என்றும் இதைக் கண்டித்து அண்மையில் பாஜக நடத்திய போராட்டத்தை வரவேற்பதாகவும், பல்வேறு நகராட்சிகளில் பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தும் அதிமுக நாகர்கோவிலில் போராட்டம் நடத்தவில்லை என்றும் ராம்மோகன் தெரிவித்தார். நல்லாட்சியை அதிமுக ஆதரிக்கிறது என்று அப்போது நகர்மன்றத் தலைவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
நகரில் குப்பைகளைச் சேகரித்து அகற்ற 1.8.2010-ல் இருந்து புதிய ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளதாகவும், 2 பிரிவாக நகரில் குப்பைகளை அகற்றும் பணி ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
நகர்மன்றக் கூட்ட அரங்கில் உறுப்பினர்கள் அமரும் இருக்கைகளின் அவலம் குறித்து அதிமுக உறுப்பினர் நாகராஜன் சுட்டிக்காட்டினார். குடிநீர்ப் பணியாளர்களுக்கு நகராட்சி சார்பில் செல்போன் சிம்கார்டுகள் வழங்க வேண்டும் என்று மதிமுக உறுப்பினர் உதயகுமார் கோரினார்.
அது தொடர்பாக வரும் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவருமாறு அதிகாரிகளை தலைவர் கேட்டுக்கொண்டார். தற்போது குடிநீரில் குறைந்த அளவுக்கு குளோரின் கலக்கவும், தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்க பொதுமக்களை அறிவுறுத்தவும் வேண்டும் என்றார் அவர்.