கோடையில் கூடுதல் குடிநீர் விநியோகம்: நகர்மன்ற தலைவர் உறுதி
விழுப்புரம் நகரில் கடும் கோடையிலும் கூடுதலாக குடிநீர் விநியோகிக்கப்படும் என புதன்கிழமை நகர்மன்றத்தில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகர்மன்றத்தலைவர் ஜி. பாஸ்கரன் கூறினார்.
விழுப்புரம் நகர்மன்றத்தில், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு, சுகாதாரம், நகர்ப்புற அமைப்பு குறித்து அதிகாரிகளுடன் புதன்கிழமை நகர்மன்றத் தலைவர் ஜி.பாஸ்கரன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் கூறியது: விழுப்புரம் நகர்மன்றப்பகுதியில், ஒரு நபருக்கு 54 லிட்டர் வீதம் குடிநீர் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஒருநபருக்கு 90 லிட்டர் வீதம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் புதிதாக 2 குடிநீர் டேங்க் அமைக்கப்பட்டு, தற்போது அந்த புதிய டேங்குகளில் இருந்து ஆய்வுக்காக தண்ணீர் திறந்துவிட்டு வருகிறோம்.
ஏற்கெனவே உள்ள 2 டேங்குகளுடன் புதிதாக 2 டேங்குகள் சேர்ந்து மொத்தம் 4 டேங்குகளில் குடிநீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் கடும் கோடையிலும், விழுப்புரம் நகரில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. கூடுதலாகவே குடிநீர் வழங்கப்படும். நகரில் சுத்தமாக வைத்திருக்கும் வகையில் கூடுதலாக 47 குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளது.
இவை வார்டுகளில் வைத்து குப்பை தெருக்களில் தேங்காமல் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும். இது தவிர கூடுதலாக 40 தள்ளுவண்டிகள் குப்பை சேகரிக்க வாங்கப்பட்டுள்ளது. நகரமைப்பு வழிகாட்டி விதிமுறைகளின்படி, புது கட்டிடங்கள் அனுமதி அளிக்கப்படுவதுடன், கண்காணிக்கப்படும் என்றார்.
கூட்டத்தில், ஆணையர் ராஜேந்திரன், மேலாளர் மங்கையர்க்கரசி (பொறுப்பு) வருவாய் அலுவலர் நாராயணசாமி, வருவாய் ஆய்வாளர்கள் சாமிராஜ், உமாசங்கர், நகரமைப்பு ஆய்வாளர் கோகுல், அமலின்சுகுணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.