தினமலர் 26.05.2010
சர்ச்சையில் சிக்கிய சாக்கடை கால்வாய் இடிப்பு
கோத்தகிரி : கோத்தகிரி மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றியதில் பாரபட்சம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பாதாள சாக்கடை கால்வாய் இடிக்கப்பட்டது. கோத்தகிரி மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்பு காரணமாக, சாலையின் அகலம் குறைந்துள்ளதால் வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், இவ்வழியாக செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு இடையே சென்று வந்தனர். தன்னார்வ அமைப்புகள் உட்பட பொதுமக்கள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தினர். இதன்படி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. தொடர்ந்து சாலை சீரமைக்கப்பட்டது. தற்போது சாலையோர நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன்பின், பழைய காவல் நிலையம் அருகே, பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் இரவோடு இரவாக துவக்கப்பட்டது. ஆனால், நில அளவை செய்து, “சர்வே‘ கல் பதிக்கப்பட்ட இடத்தை ஒட்டி கால்வாய் அமைக்கவில்லை. மாறாக, 2 முதல் 3 அடிவரை விட்டு, கால்வாய் அமைக்கப்பட்டது.
இதனை மீண்டும் நிலஅளவை செய்யவேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தினர். இதனால், பாதாள சாக்கடை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தலைமை சர்வேயர் மூலம் மீண்டும் நில அளவை செய்யப்பட்டது. இதில், பெரும்பாலான கட்டடங்கள் 2 முதல் 4 அடிவரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதில், ஓரிரு கட்டடத்தில் ஆக்கிரமிப்பின் அகலம் கூடுதலாக இருந்தது. ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்ட சர்வேயர்கள் சம்மந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களிடம் இருந்து பணம் பெற்று கொண்டு அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இப்பிரச்னையில், பாதிக்கப்பட்டோருக்கும், அலுவலர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் முன்னிலையில், பழைய நிலஅளவை ஆவணத்தின்படி, மீண்டும் நிலஅளவை செய்யவேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தினர். மேலும், உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நில அளவையர் மீது வழக்கு தொடுக்கவும் பலர் முடிவெடுத்தனர். நில அளவையின் பழைய ஆவணத்தின் நகல் உட்பட சில முக்கிய ஆவணங்களை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை நில அளவை செய்த இடம் வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இந்நிலையில்,”இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது வெறும் கண்துடைப்பு நாடகம்; பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட நில அளவையர் மீது வழக்கு தொடுக்கப்படும்‘ என பாதிக்கப்பட்டோர் எச்சரித்துள்ளனர்.