தினமலர் 15.08.2012
சுகாதாரமான முறையில் இறைச்சி விற்க வேண்டும் :அதிகாரிகள் எச்சரிக்கை
உடுமலை : சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டும் என, சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.விதிமுறைகளை பின்பற்றாமல் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்வது குறித்து, புகைப்படங்களுடன் “தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, உடுமலை நகராட்சி சுகாதாரத்துறையினர், ஆய்வு மேற்கொண்டனர்.உடுமலை நகர் நல அலுவலர் டாக்டர் சோமசுந்தரம் கூறுகையில்,””நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இறைச்சி சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆட்டு இறைச்சி விற்பனை செய்பவர்களிடம், நகராட்சி ஆடுவதை கூடத்தில் ஆடுகளை வெட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். சுகாதாரமான முறையில் கடைகளை பராமரிக்கவும்; விற்பனை செய்ய வேண்டும் எனவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.
உணவு பாதுகாப்பு அலுவலர் காமராஜ் கூறியதாவது:இறைச்சி கடைகள் ஆய்வு செய்யப்பட்டு, அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார கேடான மற்றும் சாக்கடை யோரம் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது; இறந்த இறைச்சிகளை விற்பனை செய்ய கூடாது என தெரிவிக்கப்பட்டது.பொதுமக்களுக்கு அறுவறுக்க தக்க வகையில், இறைச்சிகளை வைக்கவோ, வெட்டவோ கூடாது. நாய் உள்ளிட்ட விலங்குகள் இறைச்சிகளுக்காக சுற்றும் வகையில், தெருக்களில் இறைச்சிகளை கொட்ட கூடாது. இறைச்சி கழிவுகளை ரோட்டிலோ, திறந்த வெளியிலோ கொட்டாமல் அதற்குரிய குப்பை தொட்டிகளில் போட வேண்டும். இறைச்சி விற்பனை செய்யுமிடம் “டைல்ஸ்’ ஒட்டிய அறையாக இருக்க வேண்டும்; கடைகளில் தினசரி கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும். இறைச்சி விற்பனை செய்பவர்கள், மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.