தினமலர் 22.04.2010
சென்ட்ரல் மார்க்கெட் டெபாசிட் மாநகராட்சி குறைக்க முடிவு
மதுரை : மதுரை மாட்டுத்தாவணிக்கு மாறும் சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகளுக்கு டெபாசிட் தொகை மீண்டும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்ட்ரல் மார்க்கெட்டை மாட்டுத்தாவணிக்கு மாற்றும் பணிகள் நடக்கின்றன. புதிய இடத்தில் கட்டுமான பணிகள், 80 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் அங்கு, சென்ட்ரல் மார்க்கெட் இடம் மாற்றப்பட உள்ளது. புதிய இடத்திற்கான டெபாசிட் தொகையை பெரிய கடைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய், சிறு கடைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் என மாநகராட்சி நிர்ணயித்தது. இத்தொகை அதிகமாக இருப்பதாகக் கூறி, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் சென்ட்ரல் மார்க்கெட் இடம் மாறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே ஏப்ரல் மாதம் முதல், சென்ட்ரல் மார்க்கெட் கடைகளை ஏலம் விடாமல், மாநகராட்சியே வாடகை வசூலிக்கத் துவங்கியது. தற்போது புதிய கடைகளுக்கான டெபாசிட் தொகையை பெரிய கடைகளுக்கும், தரை கடைகளுக்கும் 50 ஆயிரம் ரூபாய் எனவும், சிறு கடைகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் எனவும் மாநகராட்சி நிர்ணயித்துள்ளது.இதற்கான தீர்மானம் இன்று நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கடைகளுக்கான வாடகை தொகையும் மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.