தினமலர் 24.10.2014
சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகள் எவை? மென்பொருள் மூலம் கணக்கெடுக்க புதிய திட்டம்
சென்னை : புதிய அலைபேசி செயலி (அப்ளிகேஷன்) மூலம், சென்னையில் மழைநீர்
தேங்கும் இடங்களை துல்லியமாக கணக்கெடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்கான வரைபடமும் தயாரிக்கப்பட உள்ளது.
துல்லியமாக…
சென்னை
மாநகராட்சியில் மழைநீர் தேங்கும் பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும்
கணக்கெடுக்கப்படுகின்றன. பொதுவாக புகார் வரும் பகுதிகள், ஊழியர்கள் நேரில்
அடையாளம் காணும் பகுதிகள், தாழ்வான பகுதிகளாகவும், மழைநீர் தேங்கும்
பகுதிகளாகவும் அடையாளம் காணப்பட்டு, அவை வரைபடமாக தயாரிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், அனைத்து மண்டலங்களிலும் மழைநீர் தேக்கம் உள்ள பகுதிகளை,
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில், புதிய மென்பொருள் மூலம் துல்லியமாக
கணக்கெடுக்க, மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
கூகுளில் பார்க்கலாம்
: இதற்காக ஓ.டி.கே., (ஓப்பன் டேட்டா கிட்) என்ற மென்பொருள்,
பொறியாளர்களின், ‘ஸ்மார்ட்’ அலைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு
உள்ளது.இந்த மென்பொருள் மூலம் ஒரு இடத்தில் தண்ணீர் தேங்குவதை படம்
பிடித்தால், புவியியல் ரீதியாக அந்த இடம், செயற்கைக்கோள் மூலம் துல்லியமாக
பதிவாகும். இந்த படம், தலைமை அலுவலகத்தில் உள்ள பிரதான கணினியில்
பதிவாகும். ‘கூகுள்’ வரைபடத்தில் தண்ணீர் தேக்கம் உள்ள பகுதி, சிவப்பு
நிறத்தில் காட்டும்.
பொறியாளர்கள் படம் பிடிக்கும் பகுதிகள்
மட்டுமில்லாமல், புகார் பிரிவில் பதிவாகும் இடங்களும் இதில் சேர்த்துக்
கொள்ளப்படும்.தற்போது சிறப்பு திட்டங்கள் துறையில் உள்ள, 40 பொறியாளர்களின்
அலைபேசியில் இந்த மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மழைநீர் தேங்கும்
பகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. விரைவில், 200 வார்டு
பொறியாளர்களுக்கும் இந்த மென்பொருள் வழங்கப்பட உள்ளது.
சாலை சீரமைப்புக்கும் உதவும்
: இதன் மூலம் இந்த வடகிழக்கு பருவமழைக்கு தண்ணீர் தேங்கும் பகுதிகளை
துல்லியமாக கணக்கெடுத்து, அடுத்த மழைக்கு முன் அங்கு கட்டமைப்பு பணிகளை
உருவாக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், இந்த மென்பொருள்
மூலம் மழைநீர் தேக்கம் மட்டுமல்லாமல், சாலை சீரமைப்பு, மாநகராட்சி
சொத்துக்கள் என அனைத்தும் பதிவிறக்கம் செய்யப்பட உள்ளன.