தினமணி 25.11.2009
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
திருநெல்வேலி, நவ. 24: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட் டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலக ஒருங்கிணைந்த நோய்கள் கண்காணிப்புத் திட்ட ஆலோசகர் லியாகத் அலி கூறினார்.
திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் கள விளம்பர அலுவலகம் சார்பில் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு பிரசார தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லியாகத் அலி பேசியது: பன்றிக் காய்ச்சலை உலகத்தைவிட்டே ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும். நோய் பரவுவதை தனி ஒரு ஆளாக யாரும் நின்று தடுக்க முடியாது. அனைவரும் சேர்ந்து செயல்பட்டால்தான் தடுக்க முடியும்.
நம் நாட்டுக்கு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி மெக்ஸிகோ நாட்டில் இருந்து வந்தவர் மூலம் பன்றிக் காய்ச்சல் பரவியது. தற்போது 14,430 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட் டுள்ளனர். 553 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் 2,330 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கபட்டுள் ளனர். இது வரை 11 பேர் இறந்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சல் காற்றின் மூலம் பரவும். இதனால் பன்றிக் காய்ச்சல் இருப்பவர்களிடம் மிகவும் கவனத்தோடு பழக வேண்டும். பன்றிக் காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு தமிழகத்தில் சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக தற்போது மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதை முற்றிலும் ஒழிக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் லியாகத் அலி.
கள விளம்பர அலுவலர் தி. சிவக்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ச.வை. சந்திரசேகரன், திருநெல்வேலி சுகாதாரத் துறை துணை இயக்குநர் கே.ஏ மீரா மொய்தீன் முன்னிலை வகித்தனர். வினாடி –வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன் பரிசு வழங்கினார்.
கள விளம்பர அலுவலர் எம். ஸ்மிதி, நேரு யுவ கேந்திர மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் ஆர். மதிவாணன், இந்திய செஞ்சிலுவைச் சங்கச் செயலர் டி.ஏ. பிரபாகர், பொருளாளர் எம். சொக்கலிங்கம் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.