தினமலர் 10.06.2010
திருப்போரூர் பேரூராட்சி கடைகள் ஏலம்
திருப்போரூர் : திருப்போரூர் பேரூராட்சி கடைகளை, வணிகர்கள் போட்டிப் போட்டு ஏலம் எடுத்தனர்.திருப்போரூர் பஸ் நிலையம் அருகில், ஒரு வருடத்திற்கு முன்பு பேரூராட்சி சார்பில், 11 லட்சம் ரூபாய் மதிப்பில் 10 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டது. கடைகளை வாடகைக்கு விட பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.இதற்கான ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன் வைப்பு தொகையாக, இரண்டு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டது.
இதற்கு கவுன்சிலர்கள் மற்றும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பேரில் முன் வைப்பு தொகை ஒரு லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டது.நேற்று முறைப்படி ஏலம் நடந்தது. ஏலத்தில் 70 பேர் கலந்து கொண்டனர். ஏலத்தில் அதிகபட்சமாக 5ம் எண் கடைக்கு 10 பேர், குறைந்தபட்சமாக 8ம் எண் கடைக்கு 2 பேர் போட்டியிட்டனர்.அதிகபட்ச மாத வாடகையாக 8ம் எண் கடை, 7 ஆயிரத்து 800 ரூபாய்க்கு ஏலம் போனது. குறைந்தபட்சமாக 10ம் எண் கடை, 2 ஆயிரத்து 600 ரூபாய்க்கு ஏலம் போனது. பத்து கடைகளுக்கும் சேர்த்து மாத வாடகையாக மட்டும் 53 ஆயிரம் ரூபாய் பேரூராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.ஏலம் எடுத்தவர்கள் ஒரு ஆண்டுக்கான வாடகை தொகையை மொத்தமாக இரண்டு நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த வாடகைக்கு ஏலம் போன, 9 மற்றும் 10ம் எண் கடைகளுக்கு ஆட்சேபனைகள் எழுந்தால், மறு ஏலம் விடப்படுமென பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தெரிவித்தார