தினமணி 02.09.2013
தினமணி 02.09.2013
தேனி நகராட்சி புதிய பஸ் நிலைய அணுகு சாலை சீரமைப்புப் பணி தொடக்கம்
தேனி நகராட்சி புதிய பஸ் நிலையத்துக்கான அணுகு
சாலையை சீரமைப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை
சார்பில் சனிக்கிழமை தேனி-பெரியகுளம் புறவழிச் சாலையை சீரமைக்கும் பணி
தொடங்கியது.
தேனியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி
கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. புதிய பஸ் நிலைய
அணுகு சாலையான தேனி-பெரியகுளம் புற வழிச்சாலை, பஸ் நிலையத்தின் தரை
மட்டத்தைவிட 9 மீட்டர் உயரமாக உள்ளது. மேட்டுப்பாங்கான சாலையில் புதிய பஸ்
நிலையத்துக்கு பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், புதிய பஸ்
நிலையத்துக்கு அருகில் உள்ள பகுதியில் சாலையின் மேட்டை குறைக்கவும்,
அகலப்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இந்தப் பணிக்கு அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து மாநில நெடுஞ்சாலை துறை
சார்பில் சாலை சீரமைப்புப் பணிக்கு டெண்டர் விடப்பட்டது. வனத் துறைக்குச்
சொந்தமான இடத்தில் உள்ள பஸ் நிலைய அணுகு சாலையான தேனி-பெரியகுளம் புறவழிச்
சாலையை சீரமைப்பதற்கு முறையாக அனுமதி பெறாததால், சீரமைப்பு பணிகளை
தொடங்குவதற்கு வனத் துறை தடை விதித்தது. அணுகு சாலை சீரமைப்புக்கு வனத்
துறையிடமிருந்து அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், புதிய
பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்குத் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர்
ஆனந்தன் ஆகியோரின் தலையீட்டால், புதிய பஸ் நிலைய அணுகு சாலை சீரமைப்புக்கு
கடந்த ஆக.26ஆம் தேதி வனத்துறை அனுமதி வழங்கியது.
இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய பஸ் நிலைய
அணுகு சாலை சீரமைப்பு பணி சனிக்கிழமை தொடங்கியது. சாலை சீரமைப்பு பணி
நடைபெறுவதால் தேனி-பெரியகுளம் புற வழிச் சாலையில் போக்குவரத்து தடை
செய்யப்பட்டுள்ளது.
சாலையின் மேட்டை குறைப்பதற்கு மண்ணை அப்புறப்படுத்தும் பணி 10
நாட்களில் முடிவடையும் என்றும், தொடர்ந்து சாலை சீரமைப்பு பணி துரிதமாக
நடைபெறும் என்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.