தினமணி 18.12.2009
பழனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பழனி டிச. 17: பழனி அடிவாரத்தில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. நெடுஞ்சாலைப் பகுதி, கிரிவீதியிலும் ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி பஸ் நிலையத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் வழிநெடுக சாலையின் இருபுறமும் கடைகள், நடைபாதை கடைகள் என ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தன.
இந்த நிலையில் நீளமான அலகு குத்தி, காவடி எடுóத்து வரும் பக்தர்கள் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள இந்த ஆக்கிரமிப்பால் அவதிப்பட்டு வந்தனர். இவற்றை செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, திருக்கோயில், வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து வியாழக்கிழமை நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிóல் ஈடுபட்டது. தேவர் சிலை முதல் சரவணப்பொய்கை வரையில் முதல்கட்டமாக ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் காவல்துறையினர் உதவியுடன் அகற்றினர். அப்போது அடிவாரம் வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி ஆணையர் சித்திக் மற்றும் காவல்துறையினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்பு அகற்றுவதால் பொருட்சேதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நகராட்சியின் சாக்கடை பகுதி வரையில் கடை வைக்கலாம் என்றும் அதற்கு மேல் கூரையோ அல்லது கடையோ நீட்டிக்கக்கூடாது என நகராட்சி ஆணையர் உத்தரவிóட்டார்.
அதைத் தொடர்ந்து கடைக்காரர்கள் மாலைக்குள் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் உள்ளவற்றை அகற்றுவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பகற்றத்தை நிறுத்தினர். தற்போது தேவர்சிலை முதல் பாதவிநாயகர் கோயில்வரை பக்தர்கள் இடையூறின்றி செல்லும் நிலையில் நெடுஞ்சாலை, வருவாய் மற்றும் திருக்கோயிலுக்கு உட்பட்ட கிரிவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அப்படியே உள்ளன. இவற்றையும் அகற்ற வேண்டுமென பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.