தினமணி 19.03.2010
பஸ் நிலைய கடைகளை ஏலம்விட உயர் நீதிமன்றம் தடை
செஞ்சி,மார்ச் 18: செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை ஏலம் விட சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
செஞ்சி பஸ் நிலைய விரிவாக்கப்பணி தற்போது சுமார் ரூ.90 லட்சத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பஸ் நிலைய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சத்து 75 ஆயிரத்தில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு வணிக வளாகம் கட்டப்பட்டது. வளாகத்தில் மொத்தம் 21 கடைகள் உள்ளன.
இதில் தற்போது 12 கடைகளுக்கு மட்டும் ஏலம் விட செஞ்சி பேரூராட்சி, நாளிதழ்களில் 13.3.2010-ல் அறிவிப்பு செய்து 18.3.2010-ல் கடைகள் ஏலம் விடப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.
இதனால் கடைகளை ஏலம் எடுக்க முன்வைப்பு தொகையை பேரூராட்சியில் 248 பேர் ரூ.58 லட்சத்தை செலுத்தி உள்ளனர். இந்நிலையில், கடைகளை ஏலம் எடுப்பதற்கு கால அவகாசம் தேவை என்றும், ஏலத்தில் குளறுபடி உள்ளதாக கூறியும் சென்னை உயர் நீதிமன்றத்தில், செஞ்சி சிறுகடம்பூர் எஸ்.மணிவண்ணன் ஏலத்துக்கு இடைக்கால தடை கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரணை செய்த நீதிபதி விளம்பரம் வெளியிட்ட 15 நாள்களுக்கு பிறகுதான் ஏலம் விட வேண்டும்.
மேலும் சொத்து மதிப்பு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வேண்டும். செஞ்சி பேரூராட்சி, நாளிதழ்களில் டெண்டர் மற்றும் ஏலம் என்று அறிவிப்பு செய்துள்ளது. இதில் ஏதாதவது ஒன்றைத்தான் பேரூராட்சி அறிவிக்க வேண்டும் என்று கூறி இடைக்கால தடை உத்தரவை வழங்கினார்.