தினகரன் 02.02.2010
பிளாஸ்ரிக் பொருட்களிலிருந்து எரிபொருள் உற்பத்தி செய்ய திட்டம
பாவனைக்குதவாத பிளாஸ்ரிக் பொருட்களில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்யும் திட்டமொன்றை மத்திய சுற்றாடல் அதிகார சபை அடுத்த மாதம் ஆரம்பிக்க உள்ளதாக சுற்றாடல் அதிகார சபைத் தலைவர் டபிள்யூ. அபேவிக்ரம தெரிவித்தார்.
இதற்காக யட்டியந்தோட்டையில் தொழிற்சாலை யொன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் இங்கு உற்பத்தி செய்யப்படும் எரிபொருள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாவனையில் இருந்து ஒதுக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் சூழல் மாசடைவதை தடுக்கும் வகையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
எரிபொருள் உற்பத்தி செய்வதற்காக வவுனியா நிவாரணக் கிராமங்களில் பாவிக்கப்படும் பிளாஸ்ரிக் போத்தல்களும் எடுத்துவரப்பட உள்ளதோடு நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் பிளாஸ்ரிக் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளன. கிலோ 20 ரூபா வீதம் பிளாஸ்டிக் பொருட்கள் கொள்வனவு செய்யபட உள்ள தோடு அவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எரிபொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபைத் தலைவர் கூறினார்.
பிளாஸ்ரிக்கில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை தனியார் ஒருவர் கண்டு பிடித்துள்ளார். மொரட்டுவ பல்கலைக்கழத்தின் ஆலோசனையை பெற்று மேற்படி எரிபொருள் உற்பத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை 10 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. ஆரம்பத்தில் சிறிய அளவில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதோடு அதன் பெறுபேற்றின் படி பாரிய அளவில் எரிபொருள் உற்பத்தி செய் திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலும் பிளாஸ்ரிக் மூலம் எரிபொருள் உற்பத்தி செய்யும் திட்டங்கள் வெற்றியளித்துள்ளதாக கூறிய அவர், முதற்கட்டமாக பெற்றோல் உற்பத்தி செய்யப்பட உள்ளது என்றார்.
இந்த உற்பத்தித் திட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கும் உற்பத்தியாளருக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. (ர–ஜ)