தினகரன் 11.06.2010
போடி நகராட்சியில் ஓட்டல்களில் பாலிதீன் பைகள் பயன்படுத்த தடை
போடி, ஜூன் 11: ஓட்டல்கள், டீக்கடைகள், இறைச்சி கடைகளில் பாலிதீன் பைகளை பயன்படுத்த தடைவிதித்து போடி நகராட்சி தமிழகத்திற்கே முன்னுதாரணமாக ‘சுற்றுச்சூழல் புரட்சியை’ துவக்கியுள்ளது.
தேனி மாவட்டம் போடி நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற சரவணக்குமார் பாலிதீன் பைகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்படி போடி பகுதியில் ஓட்டல்கள், டீக்கடைகளில் பாலிதீன் பைகளை பயன்படுத்த தடை விதித்து நகராட்சி கூட்டத்தில் 3 மாதம் முன்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதுதொடர்பாக கமிஷனர், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள், டீக்கடைக்காரர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படும் வகையில் ஓட்டல் உரிமையாளர்கள், டீக்கடைக்காரர்கள் இணைந்து நேற்றுமுன் தினம் கடையடைப்பும், விழிப்புணர்வு ஊர்வலமும் நடத்தினர்.
நேற்று காலை முதல் ஓட்டல்கள், டீக்கடைகளில் பாலிதீன் பைகள் பயன்பாடு முழுமையாக நிறுத்தப்பட்டது. போடி பகுதி இறைச்சி கடைகளிலும் இலைகளில் வைத்து இறைச்சி வழங்கப்பட்டது. தமிழகத்திற்கே முன்னுதாரணமாக சுற்றுச்சூழல் புரட்சி போடி நகராட்சியில் துவங்கியுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் கலைச்செல்வம் கூறுகையில், “பாலிதீன் ஒழிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க முடிவு செய்துள்ளோம். நேற்று காலை பாத்திரம், துணிப்பை கொண்டு வந்தவர்களுக்கு மட்டுமே பார்சல்கள் வழங்கினோம்” என்றார்.