தினகரன் 25.05.2010
மக்கள்தொகை கணக்கெடுப்பு கதவு எண்களை வெளிப்புறம் எழுதி வைக்கவேண்டும்
நாகர்கோவில், மே 25: நாகர்கோவில் நகராட்சி ஆணையர் ஜானகி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியின் முதல்கட்டமான வீட்டு பட்டியல், வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் இந்திய குடியுரிமைக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல் தொடர்பான தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுக்கும் பணிகள் வரும் 1ம் தேதி துவங்குகிறது. ஜூலை 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர்கள் தங்கள் வீடு தேடி வந்து விபரங்களை சேகரிப்பதற்கு வசதியாக நகராட்சியால் கொடுக்கப்பட்டுள்ள கதவு எண்களை வீடுகளில் வெளிப்புறமாக தெரியும்படி மக்கள் எழுதி வைக்க வேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ள களப்பணியாளர்கள் பயன்படுத்த வசதியாக படிவங்கள் வைப்பதற்கான ‘பைல்’கள் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவிலில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்திற்கு வந்த ‘பைல்’களை தாசில்தார் நாகராஜன் சரிபார்த்தார்.