மாலை மலர் 29.07.2010
மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகளில் கட்டணம் ரத்து மாநகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு
சென்னை, ஜூலை. 29- சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் ராஜேஷ் லக்கானி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் சுதர்சனம் எம்.எல்.ஏ. மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மதுவிலக்கு தொடர்பாக முதல்–அமைச்சர் கருணாநிதியின் அறிவிப்புக்கு பா.ம.க. சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவர் ஜெயராமன் பேசியதாவது:-
மதுவிலக்கு கொள்கையில் விரைவில் நல்ல தகவல் வரும் என்று முதல்–அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார். பா.ம.க. சார்பில் அவருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம்.முதல்வர் கருணாநிதி விரைவில் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் (பகுஜன் சமாஜ்):- துப்புரவு பணியாளர்களுக்கு தரமற்ற மழைக்கோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. தரமானதாக வழங்க வேண்டும். ஓய்வு பெறுபவர்களின் பணி, பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். ஓட்டேரி பிரிக்கேன் சாலைக்கு இரட்டைமலை சீனிவாசன் பெயர் சூட்ட வேண்டும்.
மேயர் மா. சுப்பிரமணியன்:- கடந்த 3? ஆண்டுகளில் கருணை அடிப்படையில் 1,200 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றும் பலன் பெறாமல் இருந்த 2,156 பேருக்கு ரூ.56 கோடி வழங்கி செட்டில் செய்யப்பட்டுள்ளது.
உறுப்பினர் கேட்டுக் கொண்டபடி பிரிக்ளின் சாலைக்கு இரட்டைமலை சீனிவாசன் பெயர் வைப்பது பற்றி அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
ஜெயகலா பிரபாகர் (காங்கிரஸ்):- சொத்து வரி மறைமுகமாக உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதே?
மேயர் மா. சுப்பிரமணியன்:- சொத்து வரி உயர்வு எதுவும் கிடையாது. வரி விதிக்கப்பட்ட கட்டிடங்களில் உபயோகத்தன்மை மாற்றம் மற்றும் கூடுதல் கட்டுமானம் போன்றவற்றால் வரிமாற்றம் செய்யப்படும்.
துல்கருணை (காங்கிரஸ்):- ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டியும், நினைவிடத்தில் அணையா விளக்கு ஏற்றியும் பெருமை சேர்த்த முதல்–அமைச்சருக்கு நன்றி. அதேபோல் ராஜீவ் காந்தியின் உடல் சென்னை பொது மருத்துவமனையில் தான் வைக்கப்பட்டிருந்தது. எனவே பொது மருத் துவமனைக்கு ராஜீவ்காந்தியின் பெயரை சூட்ட வேண்டும்.
சைதை ரவி (எதிர்கட்சித்தலைவர்):- சென்னையில் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்து வரி வசூலிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டது. சில பகுதிகள் மிகவும் முன்னேறி விட்டன. அந்த பகுதிகளில் குறைந்த கட்ட ணமே வசூலிக்கப்படுகிறது.உதாரணமாக ராஜீவ்காந்தி சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள் இதுபோன்ற பகுதிகளுக்கு கட்டண மதிப்பு சீராய்வு செய்யப்பட வேண்டும். போலி டாக்டர்களை ஒழிக்க மருத்துவமனைகள், கிளீனிக் பற்றி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அரசை வலியுறுத்தி விரைவில் தடை செய்ய வேண்டும்.
ராமலிங்கம் (ஆளுங்கட் சித்தலைவர்):- சென்னையில் குப்பைகளை அகற்றவும் அழகுபடுத்தவும் மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். கவுன்சிலர்களுக்கு லேப்– டாப், மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகளில் கட்டணம் ரத்து ஆகியவை பாராட்டுக்குரியது.
இவ்வாறு விவாதம் நடந்தது. அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மாநகராட்சி நலவாழ்வு மையங்களில் சிறப்பு மருத்துவ வார்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட கட்டண முறை ரத்து செய்யப்படுகிறது. ரூ.19 கோடியே 79 லட்சம் செலவில் குப்பைகளை அகற்றுவதற்காக 93 நவீன காம்பாக்டர் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. ரூ.1 கோடி செலவில் ஆலந்தூர் சாலையில் நவீன குப்பை மாற்று நிலையம் கட்டப்படும்.
நுங்கம்பாக்கத்தில் புதிய தொடக்கப்பள்ளி தொடங்க அனுமதிப்பது. சென்னையில் 6 லட்சத்து 27 ஆயிரம் பேர் சொத்து வரி செலுத்துகிறார்கள். வருடம் ரூ.365 கோடி வசூலாகிறது. குறித்த காலத்தில் வரி செலுத்துபவர்களுக்கு ஒரு சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். செலுத்த தவறியவர்கசளுக்கு ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.