தினமலர் 21.04.2010
மாநகராட்சி பூங்கா இடத்தில் அறநிலையத்துறை கோவில் ராமநாதபுரம் பகுதி மக்கள் எதிர்ப்பு
கோவை: குழந்தைகள் விளையாடும் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் இருந்த இடத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலை கட்ட ராமநாதபுரம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவை– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ராமநாதபுரம் தபால் அலுவலகம் அருகே, ரோட்டையொட்டி வண்டிமுனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் ராமநாதபுரம் மருதூரிலுள்ள மாரியம்மன் கோவிலின் உபகோவில். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவிலிற்கு பக்தர்கள் தினமும் வருகின்றனர். ஊரின் காவல் தெய்வமாகவும், குழந்தைகள் பயந்தோ, உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ வண்டி முனியப்பன் கோவிலிற்கு சென்று கயிறு கட்டினால் சரியாகிவிடும் என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. புராதனமான பல ஆண்டுகளாக திருச்சி ரோட்டின் வடக்கு பதியில் உள்ள வண்டிமுனியப்பன் கோவிலிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மக்களின் வழக்கத்திலும், பழக்கத்திலும் ஒன்றாகிவிட்ட வண்டிமுனியப்பன் கோவிலை, ரோடு விரிவாக்கபணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற முடிவு செய்துள்ளனர். ரோடு விரிவாக்கத்தின் போது கோவிலை அப்புறப்படுத்துவதை தவிர வேறெதுவும் செய்ய முடியாது. பதிலாக மாற்று இடத்தை மாநகராட்சியிடமோ, மாவட்ட நிர்வாகத்திடமோ கேட்டு பெற நெடுஞ்சாலைத்துறையினர் கூறிவிட்டனர்.
மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பெறாமல் 23 வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவருமான திருமுகம், ராமநாதபுரம் மருதூர் பகுதியில் இருந்த விளையாட்டுத்திடலை அப்புறப்படுத்திவிட்டு, அங்கு கோவில் அமைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு மருதூர் பகுதியிலுள்ள ஒரு பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘ஊர் எல்லையில் பாதுகாப்பு கடவுளாக இருக்க வேண்டிய வண்டிமுனியப்பன் கோவிலை குடியிருப்பு பகுதிக்குள் கொண்டு வரவேண்டாம். மாற்றுஇடத்தை தேடிப்பிடித்து அங்கு வண்டிமுனியப்பனுக்கென்று தனி கோவில் கட்ட வேண்டும். வழக்கம் போல் குழந்தைகள் பூங்காவை ஏற்கனவே இருந்தது போல அமைக்க வேண்டும். அப்புறப்படுத்தப்பட்ட விளையாட்டு உபகரணங்களை அதே இடத்தில் பொருத்த வேண்டும். குழந்தைகள் விளையாட வேண்டும்.
மருதூர் பகுதிக்கென்று இருந்த ஒரே ஒரு பூங்காவை, கோவில் அமைக்கிறோம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது வேதனையளிக்கிறது. கோவிலிற்கென்று வேறு இடத்தை தேர்வு செய்யவேண்டும்‘ என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மாநகராட்சி கல்வி மற்றும் பூங்கா குழு தலைவர் கல்யாணசுந்தரம் கூறியதாவது: காலனி, லே – அவுட் ஆகியவற்றில் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு முறையாக பதிவு செய்யப்பட்டிருந்தால், அதில் பூங்கா தவிர மாற்ற பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படமாட்டது. அரசு உத்தரவும் உள்ளது. பூங்கா இடத்தை யாராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அதன் மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.இவ்வாறு கல்யாணசுந்தரம் கூறினார். இது குறித்து இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் கூறியதாவது:
மத நம்பிக்கைக்கு மாறாகவும், பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு எதிர்மறையாகவும் செயல்படக்கூடாது. வண்டி முனியப்பன் கோவில் அகற்றம் செய்யப்பட்டால், அதற்கு மாற்று இடம் கேட்பதும், புதிய கோவில் கட்டுவது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள், ஊர் பெரியவர்கள் கலந்துபேசி முடிவெடுக்கவேண்டும். அதே ஊரில் உள்ள சிலர் மனமுவந்து நிலம் கொடுக்க முன்வரலாம். அல்லது மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தால், வேறு இடம் கிடைக்கவாய்ப்பு உண்டு. இவ்வாறு அசோக் கூறினார்.