தினகரன் 07.06.2010
மேயர் சகானி தகவல் நவீன குப்பைக் கிடங்குகள் அமைக்க மாநகராட்சி திட்டம்
புதுடெல்லி, ஜூன் 7: டெல்லியிலுள்ள குப்பைக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. அதனால்,மறுசுழற்சி செய்யும் வகையில் நவீன குப்பைக் கிடங்குகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக மேயர் சகானி கூறினார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வர்த்தக மற்றும் தொழில் கழகம் சார்பில் “சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்” என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை பி.எச்.டி. ஹவுசில் நடத்தியது.
கருத்தரங்கில், டெல்லி மேயர் பி.ஆர்.சகானி கலந்து கொண்டு பேசியதாவது:
டெல்லியில் ஒரு நாளை க்கு 6,500 டன் திடக்கழிவுகள் சேருகின்றன. மாநகராட்சியில் பலஸ்வா, காஜிப்பூர், ஓக்லா ஆகிய இடங் களில் குப்பைக் கிடங்குகள் உள்ளன. இந்த 3 குப்பைக் கிடங்குகளிலும், அதன் கொள்ளளவைத் தாண்டி குப்பைகள் நிறைந்து வழிகின்றன.
இது, மாநகராட்சி எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். டெல்லியில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு வேறெங்கும் குப்பைக் கிடங்குகள் இல்லை. அதனால் 3 குப்பைக் கிடங்குகள் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடம் மட்டுமல்ல, குப்பைகளை குறைப்பதற்குமான இடமாக மாற்றப்பட வேண்டியது அவசியம்.
டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். நகரின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக, டெல்லியில் குப்பைகள் இல்லா நிலையை உருவாக்க முயற்சித்து வருகிறோம். அதற்காக, குப்பைகளை மறுசுழற்சி செய்யும் நவீன குப்பைக் கிடங்குகள் உருவாக்கப்படும். இந்த குப்பைக் கிடங்குகளால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
திரவ வகையிலான கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைவதற்காக நீரில்லா கழிப்பிடங்களை மாநகராட்சி அறிமுகப்படுத்தியது. அதேபோல, மாநகராட்சியின் பூங்காக்கள், தோட்டங்களில் சேரும் குப்பைகளை புழுக்கள், பூச்சிகளைக் கொண்டு உரமாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநகராட்சியாக டெல்லி உள்ள நிலையில், இங்கு சேரும் திடக்கழிவுகளை சேகரிப்பது, கிடங்குகளுக்கு கொண்டு செல்வது, அழிப்பது ஆகிய செயல்பாடுகளை சுற்றுப்புறச்சூழலுக்கோ, தட்பவெப்பநிலைக் கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்வதற்கு மாநகராட்சி உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு சகானி பேசினார்.