தினகரன் 27.05.2010
ரேஷனில் காலாவதி பொருள் விற்பனை: வருவாய்த்துறை ஆய்வு
ஆத்தூர்: ஆத்தூர் பகுதி ரேஷன் கடைகளில் “காலாவதி‘ உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து வட்ட வழங்கல், வருவாய்த்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சில மாதங்களுக்கு முன் காலாவதி, தரமற்ற மருந்து, மாத்திரை விற்பனை கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி பகுதி ஹோட்டல், மளிகை கடைகளில் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு, பறிமுதல் நடவடிக்கையில் சுகாரத்துறையினர் ஈடுபட்டனர். அதேபோல் ரேஷன் கடைகளில் அரிசி, மைதா, கோதுமை போன்ற உணவு மற்றும் மளிகை பொருட்கள் புழு, வண்டு பிடித்த நிலையில் இருப்பதாகவும், கூட்டுறவு, நுகர்பொருள் வாணிபக்கழகம் நடத்தும் ரேஷன் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாகவும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தமிழகம் முழுவதும் உள்ள 29 ஆயிரத்து140 கூட்டுறவு மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணி கழக 1,273 ரேஷன் கடைகளில் நேற்று வருவாய்த்துறை, கூட்டுறவு மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆத்தூர் தாலுகாவில் ஆத்தூர், நரசிங்கபுரம், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், வீரகனூர் உள்பட 200 ரேஷன் கடைகளில் ஆத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் காளிங்கவர்த்தனன் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அரசு சப்ளை செய்யும் ரவை, மைதா, கோதுமை, உளுந்து, துவரம் பருப்பு, மளிகை பொருட்கள், பாமாயில் உள்ளிட்டவைகள் காலாவதியானது விற்பனை செய்யப்படுகிறதா, விற்பனை பொருட்கள் குறித்த விபரங்களையும் ஆய்வு செய்தனர். கிராமப்புற கூட்டுறவு ரேஷன் கடையில் சுகாதாரத்துறை பணியாளர்கள், வருவாய்த்துறை என பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று ஆய்வு நடத்தினர்.ஆத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் காளிங்கவர்த்தனன் கூறியதாவது: ரேஷன் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்ய கூடாது. மைதா, கோதுமை, ரவை போன்ற பொருட்களை நீண்ட நாட்கள் வைத்து விற்க முடியாது. காலாவதி பொருட்கள் விற்கப்படுகிறதா, பொருட்களின் இருப்பு, விற்பனை குறித்த விபரங்களை சேகரித்து வருகிறோம். ஆத்தூர் டவுன் பகுதியில் காலாவதியான பொருட்கள் எதுவும் பிடிபடவில்லை. அவ்வாறு இருந்து மக்களுக்கு விநியோகம் செய்தால் சம்மந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.