தினமணி 20.08.2013
தினமணி 20.08.2013
பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தங்கம்: செப்டம்பர் 1 முதல் அமல்
சென்னையில் பிளாஸ்டிக் குப்பைகளைப் பிரித்தெடுத்து
கொடுக்கும் பொதுமக்களுக்கு தங்கக் காசு வழங்கும் திட்டம் செப்டம்பர் 1-ஆம்
முதல் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் மெல்லிய பிளாஸ்டிக் குப்பைகளைப் பிரித்துக் கொடுக்கும்
பொதுமக்களுக்கு தங்கக் காசுகள், கைக் கடிகாரங்கள் ஆகியவை வழங்கப்படும்
என்று மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து இந்தத் திட்டத்தை சோதனை முயற்சியாக செயல்படுத்த மாநகராட்சி
திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி தரப்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
திடக்கழிவுகளில் இருந்து மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுத்து
கொடுக்க ஆர்வம் காட்டும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்க
சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் செப். 1-ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு சோதனை முயற்சியாக
அனைத்து வார்டுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். இதன்படி, ஒவ்வொரு வார்டு
அலுவலகங்களிலும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5
மணி வரை பிளாஸ்டிக் குப்பைகளை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஊழியரிடம்
கொடுக்கவேண்டும்.
ஒவ்வொரு கிலோவுக்கும் உதவி செயற்பொறியாளர் கையெழுத்திட்ட எண்
இலக்கத்துடன் ஒரு டோக்கன் வழங்கப்படும். ஒவ்வொரு வார்டிலும் மாதந்தோறும்
500 கிலோவுக்கு அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் வழங்கப்பட்டால் மட்டுமே அடுத்த
மாதத்தின் முதல் வாரத்தில் புதன்கிழமை முந்தைய மாதத்தில் வழங்கப்பட்ட
டோக்கன்களின் குலுக்கல் நடத்தப்படும். குலுக்கலில் முதல் பரிசு
பெறுபவருக்கு அரை கிராம் தங்க நாணயமும், அடுத்த 5 பேருக்கு கைக் கடிகாரமும்
வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.