போடி நகராட்சி 100 சதவீத சொத்து வரி வசூலித்து சாதனை
போடி நகராட்சி, சொத்து வரியை 100 சதவீதம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில், 17,700-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு நகராட்சி சார்பில் சொத்து வரி விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டு வருகிறது.
2012-2013 ஆம் நிதியாண்டுக்கான சொத்து வரி ரூ. 1 கோடியே 50 லட்சத்து 10 ஆயிரத்து 607 வசூல் செய்யவேண்டும்.
இதில், போடி நகரில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன செல்போன் டவருக்கான சொத்து வரி செலுத்துவதற்கு ஆட்சேபணை தெரிவித்த நிலையில், இந்த ஆண்டுக்கான சொத்து வரி கேட்பு ரூ. 1 கோடி 49 லட்சத்து 94 ஆயிரத்து 371 வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, போடி நகராட்சி ஆணையர் எஸ். சசிகலா, மேலாளர் ப. பிச்சைமணி, கணக்காளர் முருகதாஸ் ஆகியோர் வழிகாட்டுதலின்பேரில், வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான வரி வசூல் குழுவினர் தீவிரமாக சொத்து வரி வசூலில் ஈடுபட்டனர். இதில், பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் ரூ. 1 கோடி 49 லட்சத்து 94 ஆயிரத்து 371 வசூல் செய்து, 100 சதவீத வசூல் சாதனை எட்டப்பட்டுள்ளது.
வரி வசூலில் தொடர்ந்து சாதனை படைத்துவரும் நகராட்சி ஊழியர்களை, நகர்மன்றத் தலைவர் வி.ஆர். பழனிராஜ், துணைத் தலைவர் ஜி. வேலுமணி, ஆணையர் எஸ். சசிகலா, பொறியாளர் ஆர். திருமலைவாசன் ஆகியோர் பாராட்டியுள்ளனர். மேலும் வரி வசூல் மூலம், போடி நகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆட்சேபணை தெரிவித்துள்ள செல்போன் நிறுவனத்துக்கு உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளதாகவும், சில தினங்களில் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆணையர் தெரிவித்தார்.