தினமலர் 16.04.2010
அறிமுகம் இல்லாதவர்கள்‘ நகராட்சியில் வரி வசூலிப்பு : 15 வேலம்பாளையம் கவுன்சிலர்கள் ‘பகீர்‘ புகார்
திருப்பூர் : ‘நகராட்சிக்கு அறிமுகம் இல்லாத பலரும் வரி வசூலிக்கின்றனர்; வரி வசூலர்கள் யார் என்பதை, நகராட்சி நிர்வாகம் அறிவிக்க வேண்டும்‘ என, கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது; நகராட்சி தலைவர் மணி தலைமை வகித்தார்.கூட்ட விவாதம்: ரத்தினசாமி (ம.தி.மு.க.,): எங்களுடைய வார்டில், ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு செலவு, நகராட்சி சார்பில் செய்துள்ளீர்கள் என்பதை பட்டியலிட வேண்டும். இ.பி., காலனியில் உள்ள டேங்கில் அளவுமானி இல்லை. மேல்நிலைத் தொட்டியாக இருப்பதால், எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை கணிக்க முடியவில்லை; தண்ணீர் இருந்தும் பொதுமக்களுக்கு உரிய முறையில் வினியோகிக்க முடிவதில்லை.
மல்லிகை (நகராட்சி பொறியாளர்): பொருத்துவதற்கான அளவுமானி வாங்கப்பட்டு விட்டது. ‘டைம் அலைன்மென்ட்‘ செய்ததும் இரண்டு நாட்களுக்குள் பொருத்தப்படும்.ரத்தினசாமி: சின்ன, சின்ன வேலைகளுக்கு கூட, நகராட்சி தாமதம் செய்து வருகிறது. இதனால், வார்டு முழுவதும் சுகாதாரம் சீர்கெட்டு கிடக்கிறது. சுகாதாரத்தை பேணிக்காக்க முயற்சிக்க வேண்டும்.
நகராட்சி தலைவர் மணி: சுகாதாரம், தண்ணீர் இரண்டுமே நகராட்சியின் தலையாய பிரச்னை; தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பது தெரிந்தது தான்; தண்ணீர் பிரச்னையை போக்க, நல்லூர், 15 வேலம்பாளையம் நகராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் துணை முதல்வரை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளேன். அனுமதி வழங்கிய பின், கூடுதலாக 15 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தலாம்.
ரத்தினசாமி: குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடுகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வார்டிலும் எவ்வளவு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என பட்டியலிட்டு தெரிவிக்க வேண்டும்.
நகராட்சி பொறியாளர்: கடந்த ஒன்றரை மாதமாக, குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை. முறைகேடு நடக்கிறது என்றால் என்ன செய்ய முடியும்.
நகராட்சி தலைவர்: கோடை தொடங்கியதும் குடிநீர் இணைப்பு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது; முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை.
ரத்தினசாமி: நகராட்சி வருவாய் குறைவாக உள்ளது. சொத்து வரியை அதிகரிக்க வேண்டும் என்று கடைசி கூட்டத்தில் தலைவர் சொன்னார். வரி தான் அதிகமானது; வசதிகள் நிறைவேற்றப்பட வில்லை.
சுப்ரமணியம் (அ.தி.மு.க.,): 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வழங்கப்படுகிறது. இக்கூட்டத்திலாவது குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
குற்றாலிங்கம் (செயல் அலுவலர்): நன்றாக ‘பம்ப்‘ ஆகி, தண்ணீர் சென்று கொண்டிருக்கும் போது, மின்சாரம் போய் விடுகிறது. அவிநாசியில் மெயின் குழாய் உடைந்ததால், இரண்டு நாட்கள் சப்ளை செய்ய முடியவில்லை.
நகராட்சி தலைவர்: கூடுதலாக குடிநீர் கிடைத்த பிறகு, ஒவ்வொரு வார்டிலும், ஏழு நாட்கள், 15 நாட்கள் என குடிநீர் வழங்க சோதனை முறையில் பரிசீலிக்கப்படும். தற்போது, நமது நகராட்சிக்கு எட்டு லட்சம் லிட்டர் குடிநீர் தேவை; ஆனால், ஐந்து லட்சம் லிட்டரே வழங்கப்படுகிறது.
நகராட்சி பொறியாளர்: நகராட்சி உருவாக்கப்படுவதற்கு முன், 6,000 குடிநீர் இணைப்புகள் இருந்தன. தற்போது 13 ஆயிரம் இணைப்புகள் உள்ளன.
சுப்ரமணியம்: சுகாதார பணியாளர்களை அதிகமாக நியமிக்க வேண்டும். குப்பையை அகற்றுவதே இல்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை இரண்டு பேர் மட்டுமே வருகின்றனர். அவர்களும் குப்பையை முழுவதுமாக அள்ளிச்செல்வதில்லை.
செயல் அலுவலர்: நகராட்சியில் மொத்தம் 112 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 20 முதல் 25 பேர் தொடர்ந்து விடுமுறை எடுத்துக் கொள்கின்றனர்.
சுப்ரமணியம்: திலகர் நகரில் பஸ் ஸ்டாப் ஏற்படுத்த வேண்டும். குழந்தை நல மையம் கட்ட வேண்டும். நகராட்சி துவக்கப்பள்ளியை, திலகர் நகர் துவக்கப்பள்ளியாக மாற்ற வேண்டும்.
விஜயா (இ.கம்யூ.,): புதுக்காலனி, அனுப்பர்பாளையம் பகுதியில் குப்பை அதிகமாக இருப்பதால், கொசுக்கள் பரவுகின்றன. தற்போதுள்ள பெயரிலேயே பள்ளிகள் செயல்படட்டும்.
செயல் அலுவலர்: முதல் வார்டு வீரப்பசெட்டியார் வீதியில், சேகரமாகும் குப்பை அளவு அதிகம். தினமும் அள்ளினாலும், மறுநாளே நிரம்பி வழிகிறது.
ரத்தினசாமி: திருவள்ளுவர் நகர் டேங்கில் உள்ள தண்ணீரை உபயோகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயா: மன்ற விவாதத்துக்கு வைக்கப்பட்டுள்ள 47வது தீர்மானம், ஏற்கனவே நடந்த கூட்டத்திலேயே தீர்மானமாக வைக்கப்பட்டுள்ளது. இன்னமும் தீர்மானமாக வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பணிகள் நிறைவேற்றப்பட வில்லை.
நடராஜன் (பா.ஜ.,): துப்புரவு பணியாளர்களின் சம்பளத்தை குறைத்து, தாமதமாக கொடுப்பதே, சுகாதார பணிகள் விரைந்து முடியாததற்கு காரணம்; பணிகளை முடிக்க சம்பளம் அதிகமாக வழங்க வேண்டும்.
செயல் அலுவலர்: மற்ற மாதங்களில் தாமதம் ஏற்படாது; வருடக்கணக்கு முடிவு என்பதால், மார்ச் மாதம் தாமதமாகி விட்டது.
நடராஜன்: ஒரு மாதத்திற்காக பேசவில்லை. தொடர்ந்து தாமதிக்கப்படுவதால், நகராட்சி கூட்டத்தில் கூற வேண்டியுள்ளது. வார்டு பகுதிக்குள் நகராட்சி பணியாளர் வரிவசூல் என்று பலரும் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர். குப்பை அள்ள வருபவர்கள் 20, 30 ரூபாய் கேட்கின்றனர்.
நகராட்சி பொறியாளர்: நகராட்சி அலுவலகத்தில் மட்டுமே பொதுமக்கள் வரிகளை செலுத்த வேண்டும்.
செயல் அலுவலர்: நகராட்சியில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது; இருப்பதே நான்கு பேர் தான்.
குணசுந்தரி (மா.கம்யூ.,): நகராட்சியில் வெளியாட்கள் பலரின் உதவியுடன் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. இதில், சில நகராட்சி ஊழியர்களுக்கும் பங்குண்டு. நகராட்சி ஏதாவது பணிகள் செய்து கொடுக்க, பணம் கேட்பதாக என்னிடம் புகார் கூறுகின்றனர். நான், விண்ணப்பங்களை நகராட்சிக்கு வாங்கி வர வேண்டியுள்ளது.
நகராட்சி தலைவர்: அவர்களிடமே விண்ணப்பத்தை கொடுத்து அனுப்புங்கள். பணம் வாங்குவது யார் என்று கடிதத்தில் புகார் எழுதித்தரச் சொல்லுங்கள்.
நகராட்சி பொறியாளர்: தனிப்பட்ட பிரச்னையை நகராட்சி கூட்டத்தில் பேசக்கூடாது. மக்களுக்காக வேலை செய்கிறோம். இழுத்தடிப்பு, பணம் வாங்குவது கிடையாது. ‘பிளம்பர்‘ கையில் விண்ணப்பங்கள் கொடுப்பதும் கிடையாது.
சரோஜா (மா.கம்யூ.,): ஒரு கனெக்ஷனுக்காக பேசக்கூடாது. கவுன்சிலர் பொய் விவாதம் செய்கிறாரா?
நடராஜன் (பா.ஜ.,): வரி வசூல் அதிகாரிகள் யார் என்ற பட்டியலை நகராட்சியில் ஒட்ட வேண்டும். அறிமுகம் இல்லாத பலரும் நகராட்சி வரி வசூல் என்று கூறி, மக்களிடம் பணம் பெற்று விடுகின்றனர்; துப்புரவு பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பணியாளர்களை ஊக்கப்படுத்தி பணிகளை முடிக்க வேண்டும்.
நகராட்சி பொறியாளர்: ‘லேபர்‘ பிரச்னையை, நகராட்சி கூட்டத்தில் பேச வேண்டிய அவசியமில்லை; தனியே பேசிக் கொள்ளலாம்.
நடராஜன்: குறைகளை கூறத்தான் நகராட்சி கூட்டம்; இதைக்கூற வேண்டாம்; அதைக்கூற வேண்டாம் என்பதற்காக அல்ல. ஒவ்வொரு முறையும் பணிகளை விரைந்து முடிக்காததால், கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று மனு கொடுக்க வேண்டியுள்ளது.
நகராட்சி பொறியாளர்: வெள்ளிக்கிழமை மாலை குழாய் உடைந்தால், சனிக்கிழமை பணியை துவங்கி முடிப்பதற்குள், திங்கள் கிழமை கலெக்டர் குறைதீர்ப்புக் கூட்டத்தில் மனு கொடுத்து விடுகிறீர்கள். கலெக்டர், எங்களிடம் பணியை விரைந்து முடிக்க உத்தரவிடுகிறார். இதை எங்களிடமே கூறி விட வேண்டியது தானே.
பாலசுப்ரமணியம்: ரோடு போடவில்லை; குப்பை அள்ளாததால் கொசு தொல்லை அதிகமாகிறது. நகராட்சி பணிகள் மந்தமான வேகத்தில் தான் நடக்கிறது.
இவ்வாறு, விவாதம் நடந்தது. 11வது வார்டு கவுன்சிலர் நாகராஜ், ஏழாவது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ரூ.13 ஆயிரம் லட்சத்துக்கு கருத்துரு! ‘திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அடுத்து வரும் 30 ஆண்டுகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு மேம்படுத்த வேண்டும்‘ என்பதை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ‘இஜிஸ் இந்தியா‘ ஆலோசகர்கள், தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
அதில், அடுத்த ஐந்தாண்டுக்கான (2011-2015) நகர் வளர்ச்சி திட்ட அறிக்கையில், குடிநீர் வசதிக்காக 2,330 லட்சம்; புதை வடிகால் திட்டம் 4,749 லட்சம்; திடக்கழிவு மேலாண்மை 229 லட்சம்; மழைநீர் வடிகால் வசதிக்காக 2,749 லட்சம்; சாலைக்காக 2,235 லட்சம்; தெருவிளக்கு வசதி 375 லட்சம்; குடிசை பகுதி முன்னேற்றத்திற்காக 160 லட்சம்; கட்டடங்கள், புவியியல் தகவல் அமைப்புக்காக 133 லட்சம்; இதர உள்கட்டமைப்பு வசதிக்காக 520 லட்சம் என மொத்தம் 13,480 லட்சம் ஒதுக்க வேண்டும்; இதற்காக, திட்டம் தயாரிக்கப்பட்டு, கருத்துரு தயார் செய்யப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.