தினமணி 25.11.2009
பரமக்குடியில் ரூ. 2.5 கோடியில் வைகை பாலம் கட்டும் பணி துவக்கம்
பரமக்குடி, நவ. 24: பரமக்குடி ஆற்றுப்பாலம் சேதமடைந்த நிலையில் இருந்ததால், அதனைப் புதிதாகக் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பரமக்குடியிலிருந்து வைகை ஆற்றின் வடக்கே உள்ள அனைத்து ஊர்களுக்கும் இந்த பாலத்தின் வழியாகவே செல்ல வேண்டும். இந்த பாலம் கட்டப்பட்டு நீண்ட காலமாகி விட்டதால், பாலத்தின் பல பகுதிகள் சேதமடைந்திருந்தன.
இதனைப் புதிதாகக் கட்ட பல்வேறு அமைப்பினர் சார்பில் குடிசை மாற்று வாரியம் மற்றும் இடக் கட்டுப்பாட்டு துறை அமைச்சர் சுப. தங்கவேலனிடம் கோரிக்கை விடுத்தனர். அவரது முயற்சியால் இப் பாலத்தைப் புதிதாகக் கட்ட ரூ. 2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், செவ்வாய்க்கிழமை அப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்காக ஜே.சி.பி. இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
இதில் நெடுஞ்சாலைத் துறை (பொது) உதவிக் கோட்ட பொறியாளர் என்.கே.ராஜதுரை, மகாலெட்சுமி (திட்டம்), வருவாய்த் துறை சார்பில் வட்டாட்சியர் வி.நாகஜோதி, ஆய்வாளர் பாண்டியன், நகராட்சிப் பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவல் துறை ஆய்வாளர் ப.சிவகுமார் தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
